ரூ 31 லட்சம் விலை.... 15 மாசம் காத்திருந்து வாங்கிய XUV 7OO பார்த்த வேலை..! வீதியில் அமர்ந்த சினிமா பிரபலம்
புத்தம் புதிதாக வாங்கிய மஹிந்திரா XUV7OO கார் சென்னை மயிலாப்பூரில் பழுதாகி நின்றதாகவும் , அவசரத்துக்கு அதனை சரி செய்யக்கூட மகிந்திரா ஊழியர்கள் எவரும் உதவாததால் விரக்திக்குள்ளான பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் ஒருவர், தனது காருடன் சாலையில் அமர்ந்திருக்கும் படத்தை ஆனந்த் மகிந்திராவின் டுவிட்டரில் பகிர்ந்து, பழுதான காரை எடுத்துக் கொண்டு தனது பணத்தை திருப்பித்தருமாரு கோரிக்கை விடுத்துள்ளார்.
அங்காடித்தெரு.. வணக்கம் சென்னை.. உள்ளிட்ட ஏராளமான படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ரிச்சர்டு எம் நாதன் என்பவர் தான் மகிந்திராவின் XUV7OO என்ற புத்தம் புதிய காரால் வீதியில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டவர்..!
ரிச்சர்டு எம் நாதன் தனது டுவிட்டரில், ரிப்பன் கூட கட் செய்யாத XUV7OO என்ற புதிய காருக்கு அருகில் பிளாட் பாரத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து . அந்த காரால் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்திருந்தார்.
அதில் 15 மாதத்திற்கு முன்பாக முன்பதிவு செய்து நீண்ட காத்திருப்புக்கு பின்னர் கடந்த 2 ந்தேதி மஹிந்திராவின் XUV7OO என்ற காரை தான் வாங்கியதாக குறிப்பிட்டுள்ளார் ரிச்சர்டு எம் நாதன், அந்த காருக்கு இன்னும் நம்பர் பிளேட் கூட வராத நிலையில், அதன் ரிப்பன் கூட கட் செய்யாமல் சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான மயிலாப்பூர் லஸ் கார்னரில் ஓட்டிச்சென்ற போது அப்படியே நின்று விட்டது இந்த கார் என்றும் உடனடியாக மகிந்திரா சர்வீஸ் நிறுவன ஊழியர்களை தொடர்பு கொண்டால் ஒருவர் கூட உதவிக்கு வரவில்லை என்றும் போனில் மட்டுமே பேசிக் கொண்டிருந்ததால் காரை நிறுத்திவிட்டு பிளாட்பாரத்தில் அமர்ந்ததாக வேதனை தெரிவித்தார்
மேலும் வெறும் 3 நாட்களிலேயே கார் இப்படி பழுதாகி விட்ட நிலையில், நகரின் முக்கியமான பகுதியில் கூட வாடிக்கையாளர் சேவை இல்லாமல் இருக்கும் இவர்களை நம்பி எப்படி நீண்ட காலம் பயணிப்பது எதனால் இந்த காரை வைத்துக் கொண்டு தான் செலுத்திய பணத்தை திருப்பி தரக்கோரி இருந்தார். ஒளிப்பதிவாளர் ரிச்சர்டு எம் நாதன், தனது டுவிட்டர் பதிவை ஆனந்த் மகிந்திராவுக்கும் பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில் 6 ந்தேதி மாலையில் அவரது வீட்டிற்கு மகிந்திரா நிறுவன அதிகாரிகள் நேரில் சென்று அவரை சமாதானப்படுத்தும் விதமாக பேசி உள்ளனர். அவர் வாங்கிய XUV7OO காரில் ஏற்பட்ட பழுது தொடர்பான விளக்கத்தை அளித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகின்றது.
Comments