சிறுவனின் உயிர் பறித்த நூல் அறுந்த பட்டம்.! பெற்றோர் கண்ணீர் மல்க வேண்டுகோள்.!
சென்னையில், பறந்து வந்த பட்டத்தை பிடிக்க முயன்ற போது 2ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து 13 வயது சிறுவன் உயிரிழந்தான். சுட்டித்தனமும், ஆபத்தை அறியா மனமும் சிறுவனின் உயிரை பறித்து விட்டதாக, பெற்றோர் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.
நூல் அறுந்து தனியே பறந்து, மாடி வீட்டில் சிக்கிய பட்டத்தை எடுக்கச் சென்று தவறி விழுந்ததால் இன்னுயிரை இழந்த 13 வயது சிறுவன் பிரசன்னா இவர் தான்......
சென்னை சூளைமேடு பாரதி தெருவைச் சேர்ந்த டெய்லர் தண்டபாணியின் 13 வயது மகன் பிரசன்னா, அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார்.
பள்ளி கோடை விடுமுறை என்பதால், திங்கட்கிழமை மாலை 6 மணியளவில், தனது நண்பர்களோடு, வீட்டின் அருகில் இருந்த பேக்கரிக்குச் சென்றுள்ளார். அப்போது, நூல் அறுந்து பறந்து வந்த பட்டத்தை பார்த்த குஷியில், அதை பிடிப்பதற்காக பின்தொடர்ந்துள்ளார்.
பெரியார் பாதை அருகே காற்றாடி ஒரு வீட்டின் மீது விழுந்துள்ளது. அந்த வீட்டின் 2ஆவது மாடிக்கு சென்று காற்றாடியை எடுக்க முயன்றபோது, திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பிரசன்னாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதிக ரத்தப் போக்கினால், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்....
நடனம், பாட்டு மற்றும் டிரம்ஸ் ஆகியவற்றின் மீது ஆர்வம் கொண்ட தனது மகனின், உயிரிழப்பை நினைத்து பார்க்க முடியவில்லை என மிகுந்த உருக்கத்துடன் விவரித்துள்ளார் சிறுவனின் தந்தை........
கோடை விடுமுறை என்பதால், சுட்டித்தனமாக விளையாடும் குழந்தைகளை பெற்றோர் தங்கள் தனிக் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியிருக்கிறது, இந்த சோக சம்பவம்....
Comments