தலையில் இரும்பு நட்டை வைத்து தையல் போட்ட அரசு மருத்துவமனை தற்குறிகள்..! அலட்சிய சிகிச்சை அம்பலம்
விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற லாரி ஓட்டுனரின் தலைக்குள் இரும்பு நட்டை வைத்து தையல் போட்டு அனுப்பிய கொடுமை வேலூரில் அரங்கேறி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் கார்த்திகேயன். திங்கட்கிழமை காலை 5 மணியளவில் மாதனூர் அருகே கார்த்திகேயன் ஓட்டிச் சென்ற லாரி பின்னால் வந்த தனியார் பேருந்து மோதியது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், தலையில் பலத்த காயம் அடைந்த ஓட்டுனர் கார்த்திகேயன் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தலையில் தையல் போடப்பட்ட நிலையில் ரத்தம் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது. தலையில் கடுமையான வலி இருந்ததாக கூறப்படுகின்றது.
இதனால், உறவினர்கள் கார்த்திகேயனை அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் ஸ்கேன் செய்ததில் கார்த்திகேயனின் தலையில் தையல் போடப்பட்ட இடத்தில் இரும்பு ‘நட்டு’ ஒன்று இருப்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், தையல் பிரிக்கப்பட்டு அந்த இரும்பு நட்டை அகற்றியுள்ளனர். தொற்று காரணமாக அவருக்கு இரண்டு நாள் கழித்தே மீண்டும் அந்த இடத்தில் தையல் போட முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து, கார்த்திகேயனின் உறவினர்கள் கூறும்போது, ‘‘விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் நாங்கள் காலை 8 மணியளவில் மருத்துவமனைக்கு சென்று பார்த்தோம். அப்போது வரை அவருக்கு எந்த முதலுதவி சிகிச்சையும் அளிக்கப்படவில்லை.
அங்கிருந்த செவிலியர்களிடம் கேட்டதற்கு சுய நினைவுடன் நன்றாகத்தான் இருக்கிறார் என்று கூறி எரிச்சலூட்டியதாகவும், அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்ட நிலையில் நாங்கள் சத்தம் போட்ட பின்னர் தான் தலையில் தையல் போட்டதாகவும், அலட்சியமாக இருந்ததுடன் தலையில் இரும்பு நட்டு வைத்து தையல் போட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் பாப்பாத்தியிடம் கேட்டதற்கு, ‘‘இது குறித்து மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழு அமைத்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் உண்மைத் தன்மை கண்டறியப்பட்ட பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
தலையில் நட்டு வைக்கப்பட்டு இருப்பதை விரைவாக கண்டு பிடித்து அகற்றி இருக்க விட்டால் உயிர் இழக்கும் அபாயம் ஏற்பட்டு இருக்கும் என்று உறவினர்கள் வேதனை தெரிவித்தனர்.
Comments