அமைச்சர் செஞ்சி மஸ்தான் பதவி விலக வேண்டும் : எடப்பாடி பழனிசாமி
கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு ஆதரவாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் செயல்படுவதாகவும் அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மது விற்பனை மற்றும் சட்டவிரோதமாக பார்களை நடத்துதல் தொடர்பாக அமைச்சரின் சொந்த ஊரான செஞ்சியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர்கள் அனைவருமே செஞ்சி மஸ்தானுக்கு ஆதரவாளர்களாக இருப்பதால், கடந்த இரண்டு ஆண்டுகளாக காவல்துறை அவர்களது நடவடிக்கைகளை முழுமையாக அறிந்திருந்தும் கைது செய்யாமல் இருந்தது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருப்பதாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
கள்ளச் சாராயம் விற்பவர்களுக்கும், சட்டவிரோத பார் நடத்தும் கட்சிக்காரர்களுக்கும் ஆதரவாக செயல்படும் செஞ்சி மஸ்தான் உடனடியாக பதவி விலக வேண்டும், இல்லையெனில், முதலமைச்சர் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
டாஸ்மாக் கடைகளில் கலால் முத்திரை உள்ள மதுபானங்கள் மட்டும் விற்பனை செய்யப்படுவதை கலால் துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
Comments