நண்பர்களின் துரோகம்.. பொறியாளர் தாயுடன் உயிரை மாய்த்தார்..! பணம் மட்டும் வாழ்க்கையா ?
தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை அருகே இளம் பொறியாளர் ஒருவர் தனது தாயுடன் முகத்தை பாலிதின் பையால் மூடி, நைட்ரஜன் வாயுவை சுவாசித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நண்பர்களின் துரோகத்தால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு
தருமபுரி மாவட்டம் புலிக்கரையைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் பழனிவேல். இவரது மனைவி சாந்தி, பொறியாளரான மகன் விஜய் ஆனந்த் ஆகிய இருவரும் ஒட்டப்பட்டி, அவ்வை நகரில் வாடகை வீடு எடுத்து தங்கி நூல் டபுளிங் தொழில் செய்து வந்தனர்.
சம்பவத்தன்று பழனிவேல் பாலக்கோட்டில் உள்ள தனது விவசாய நிலத்துக்கு சென்ற நிலையில் வீட்டில் அவரது மனைவி மற்றும் மகன் மட்டும் இருந்தனர். திரும்பி வந்து பார்த்த போது அவரது வீட்டிற்கு வெளியே எச்சரிக்கை நோட்டீஸ் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது. அதில் உள்ளே நைட்ரஜன் விஷ வாயு கசிந்து வருகின்றது , போலீசுக்கு தகவல் சொல்லவும்... முதலில் ஜன்னலை உடைக்கவும்... என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்து பார்த்த போது வீட்டில் ஒரு அறையில் தாய் சாந்தியும், மகன் விஜய் ஆனந்தும் முகத்தை பாலித்தீன் பையால் இருக்கமாக மூடிய நிலையில் சடலமாக கிடந்தனர்.
அவர்களுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த இரண்டு நைட்ரஜன் சிலிண்டர்களில் இருந்து செல்லும் டியூப்கள் அவர்களது முகத்தில் இருந்த கவசத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. இருவரது சடலத்தையும் மீட்ட போலீசார் வீட்டில் இருந்த தற்கொலை கடிதத்தை கைப்பற்றி விசாரித்தனர்
அதில் தங்கள் சாவுக்கு காரணம், தனது நண்பர்களான கார்த்திக் துரைசாமி மற்றும் அருண் என்று குறிப்பிட்டு இருந்தது. இருவரும் தங்களிடம் பிசினசுக்கு என்று 25 லட்சம் ரூபாய் அளவிற்கு பணம் பெற்று ஏமாற்றியதாகவும், கடனை அவர்கள் திருப்பித் தராததால் ஏற்பட்ட மன உளைச்சலால் இந்த முடிவை தேடிக் கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை தனது செல்போனில் குரல் பதிவாகவும் வைத்திருப்பதாக கடிதத்தில் குறிப்பிட்டிருந்த விஜய் ஆனந்த், பணம் பெற்ற கூட்டாளிகளின் முகவரி மற்றும் செல்போன் நம்பரையும் எழுதி இருந்தார். இதனை ஆதாரமாக கொண்டு கார்த்திக் மற்றும் அருண் ஆகிய இருவர் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.
வாட்ஸ் அப்பில் இருந்து குரல் பதிவை கைப்பற்றிய போலீசார் , கூட்டாளிகளான கார்த்திக் , அருண் ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர். டிரிபிள் இ இன்ஜினியரிங்கில் பெயிலானதால் விஜய் ஆனந்த் நண்பர்களான கார்த்திக் மற்றும் அருண் ஆகியோருடன் சேர்ந்து குமாரபாளையம் பகுதியில் டெக்ஸ்டைல் பிசினஸ் செய்ததாக கூறப்படுகின்றது.
25 லட்சம் ரூபாய் அளவுக்கு விஜய் ஆனந்திடம் இருந்து பணத்தை பெற்றதாகவும், பணத்திற்கு மாதந்தோறும் லட்ச ரூபாய் வட்டி தருவதாகவும் கூறி உள்ளனர். இரு மாதங்கள் மட்டுமே சொற்பமான தொகையை வழங்கி விட்டு மீதி பணத்தை கொடுக்காமல் விஜய் ஆனந்தை ஏமாற்றியதாக கூறப்படுகின்றது.
பலமுறை கேட்டும் தனது பணம் கிடைக்காத நிலையில் விரக்தி அடைந்த விஜய் ஆனந்த் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்.
வலியில்லாமல் உயிரிழக்க வேண்டும் என்பதற்காக தருமபுரி நகரில் உள்ள ஒரு கடையில் மருத்துவ பயன்பாண்பாட்டுக்கு என்று இரு நைட்ரஜன் சிலிண்டர்களையும், டியூப் மற்றும் முக கவசங்களையும் வாங்கி வந்து அவர் தனது தாயுடன் சேர்ந்து உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து இவர்களை தற்கொலைக்கு தூண்டியதாக கார்த்திக், அருண் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கோடிகளை இழந்தாலும் , உடலில் உயிரும் உழைக்கும் மன உறுதியும் இருந்தால் இழந்ததை எப்போதும் பெற இயலும் என்று பெரியவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
Comments