தேகம் மறைந்தாலும் இசையாய் வாழும் எஸ்.பி.பி... இசையுலகின் முடிசூடா மன்னன்..!

0 3441
தேகம் மறைந்தாலும் இசையாய் வாழும் எஸ்.பி.பி... இசையுலகின் முடிசூடா மன்னன்..!

பாடும் நிலா பாலு என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் 77வது பிறந்தநாள் இன்று. காலன் கடத்திச் சென்றுவிட்டாலும் இசையாய் என்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் உன்னதக் கலைஞனின் வாழ்க்கைப் பயணத்தின் சில தருணங்களை சுருக்கமாக விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...  

1969ஆம் ஆண்டு சாந்தி நிலையம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் எஸ்பிபியின் குரல் ஒலிக்கத் தொடங்கிய முதல் பாடல். 2021ஆம் ஆண்டு ரஜினிகாந்த்தின் அண்ணாத்தே படத்தில் இடம்பெற்ற "அண்ணாத்தே அண்ணாத்தே" என்ற அறிமுகப் பாடல் வரை கிட்டத்தட்ட 3 தலைமுறைகளை தனது ஏகாந்தக் குரலால் ஆட்டிப்படைத்தவர் எஸ்.பி.பி. அவரது குரலில் வந்த பல பாடல்கள் மனதின் அடி ஆழம் வரை ஊடுருவி ஒருவித சலனத்தை ஏற்படுத்தும்...

இசைஞானி இளையராஜாவின் திரை பிரவேசத்துக்குப் பிறகு எஸ்.பி.யின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. இரண்டு ஜாம்பாவான்களும் சேர்ந்து ஆயிரக்கணக்கான அற்புதமான பாடல்களை அள்ளி அள்ளி கொடுத்தனர். 80, 90 களில் இந்த இருவரின் காம்போ இல்லாத படங்கள் குறைவாகவே இருந்தன.

எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் தொடங்கி, ரஜினி,கமல் என நீண்டு, விஜய் - அஜித், தனுஷ்- சிம்பு என அவரது குரலுக்கு வாயசைக்காத நடிகர்கள் குறைவு.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என சுமார் 16 மொழிகளில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை படைத்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பாடகர் என்ற அடையாளம் மட்டுமின்றி, நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகங்கள் உண்டு.

ரஜினி படங்கள் என்றாலே அறிமுகப் பாடல் எஸ்.பி.பியாகத்தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. அந்த அளவுக்கு சூப்பர் ஸ்டாருக்கு எஸ்.பி.பி. பாடிய பாடல்கள் அனைத்துமே ஹிட்டடித்தன....

பத்மஸ்ரீ, பத்மபூஷன் என 6 முறை தேசிய விருதுகள், பல்வேறு மாநில விருதுகள், ஏராளமான தனியார் அமைப்புகளின் விருதுகள் என வாங்கிக் குவித்த எஸ்.பி.பி என்ற ஆளுமை தனிப்பட்ட மனிதராகவும் திரையுலகைச் சேர்ந்த அத்தனை பேருக்கும் பிடித்தமானவராக இருந்தார்.

இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் நம் மனதை கரைத்துக் கொண்டே இருக்கும் எஸ்.பி.பியின் குரல் என்றால் அது மிகையாகாது....

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments