நீதிபதி இருக்கை அருகே எதிரியை வாளால் வெட்டிய ரவுடி.... துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்..!
ராமநாதபுரத்தில் நீதிமன்றத்தில் ஜாமீன் கையெழுத்து போட்டவரை நீதிபதியின் இருக்கை அருகே வைத்து வாளால் வெட்டி விட்டு காட்டில் பதுங்கியிருந்தவரை போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தி பிடித்தனர்.
ராமநாதபுரம் நீதிமன்ற வளாகத்தில் காவலர் முன்னிலையில் கையில் வாளோடு அட்டகாசம் செய்த இவன் தான் ஆர்.எஸ்.மடையை சேர்ந்த ரவுடி கொக்கி குமார்.
பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் கொக்கி குமாருக்கும், சிவஞானபுரத்தை சேர்ந்த மற்றொரு ரவுடி அசோக் குமார் என்பவனுக்கும் இடையே தொழில் போட்டி உள்ளதாக தெரிகிறது.
சில நாட்களுக்கு முன்பு கொக்கி குமாரின் ஆதரவாளர் கடையில் அசோக்குமார் தனது ஆதரவாளர்களுடன் சென்று தாக்குதல் நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், மற்றொரு கொலை முயற்சி வழக்கில் நிபந்தனை ஜாமினுக்காக கையெழுத்து போடுவதற்காக ராமநாதபுரம் 2-ஆம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு சென்றிருந்தான் அசோக் குமார்.
அங்கு மறைந்திருந்த கொக்கி குமார், கையெழுத்து போட அசோக் குமார் குனிந்த உடன், தான் மறைத்து வைத்திருந்த வாளால் அசோக்குமாரின் பின்னந்தலையில் வெட்டியதாக கூறப்படுகிறது.
நீதிபதியின் இருக்கை அருகே இந்த துணிகரச் செயலை நிகழ்த்திவிட்டு கொக்கி குமார் தப்பியோடியதாக போலீசார் தெரிவித்தனர்.
அங்கிருந்த காவலர்கள், அசோக்குமாரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
தப்பியோடிய கொக்கிகுமார், பிரப்பன்வலசை அருகே கடற்கரை காட்டுப்பகுதியில் பதுங்கியிருப்பதை அவனது செல்போன் சிக்னல் மூலமாக போலீஸார் கண்டுபிடித்தனர்.
கேணிக்கரை காவல் ஆய்வாளர் ஆடிவேல் தலைமையிலான போலீசார் கொக்கி குமாரை சுற்றி வளைத்த போது அவர்களை அவன் தாக்க முயன்றதாக தெரிகிறது. இதனையடுத்து, 2 ரவுண்டு சுட்டதில் முழங்காலுக்கு கீழே குண்டடி பட்டு கொக்கி குமார் சுருண்டு விழுந்தான்.
இந்த என்கவுன்டரில் காயமடைந்த 2 காவலர்கள் மற்றும் கொக்கி குமார் ஆகியோர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தெரிவித்துள்ளார்.
Comments