ஆடு மேய்க்க வைத்து அடிக்கிறாங்க... உடல் எல்லாம் ரணம்... மனம் எல்லாம் வலி... சவுதி அரேபியாவிலிருந்து கண்ணீர் குரல்
கார் ஓட்டுநர் வேலை என்று கூறி சவுதி அரேபியாவிற்கு அழைத்துச் சென்று விட்டு அங்கு கடும் வெயிலில் ஆடு மேய்க்க விடுவதால், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள தன்னை மீட்குமாறு உதவிக்குரல் எழுப்பியுள்ளார் கள்ளக்குறிச்சி இளைஞர்.
குடும்ப கஷ்டத்தை போக்குவதற்காக வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்ற இடத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு உதவிக்குரல் எழுப்பி வருகிறார் கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏ.மழவராயனூரைச் சேர்ந்த அசோக்.
கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவிற்கு கார் ஓட்டுனர் வேலைக்காக சென்றுள்ளார் அசோக். ஆனால், அங்கு அசோக்கிற்கு ஓட்டுனர் பணி வழங்காமல் ஆடு மேய்க்க அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
கடும் வெயிலில் ஆடு மேய்க்க விடப்படுவதால் வெயிலின் தாக்கத்தால் உடலில் ஆங்காங்கே கொப்பளங்கள் ஏற்பட்டு அசோக்கின் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, வேலை அளிப்பவர்களிடம் தெரிவித்த போது இங்கு அப்படித்தான் இருக்கும் என கூறியதோடு தன்னை கட்டையால் அடித்து துன்புறுத்தி வேலை வாங்குவதாகவும் அசோக் தெரிவித்துள்ளார்.
குடும்ப கஷ்டத்திற்காக கணவர் வெளிநாடு சென்ற நிலையில் கடந்த 2 மாதமாக சம்பளம் கூட அனுப்பவில்லையென கூறும் அவரது மனைவி அர்ச்சனாதேவி, 3 குழந்தைகளுடன் கஷ்டப்பட்டு வருவதால் கணவரை மீட்க வேண்டுமென கண்ணீர்மல்க கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments