டீக்கடை, பழக்கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை.... வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நடவடிக்கை எடுக்காமல் திரும்பிச் சென்ற அதிகாரிகள்..!
மயிலாடுதுறையில் டீக்கடை மற்றும் பழக்கடையில் திடீர் சோதனை செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள், அங்குள்ளவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நடவடிக்கை எடுக்காமலேயே திரும்பிச் சென்றனர்.
சின்ன கடை வீதியில் உள்ள டீக்கடை ஒன்றில் நகராட்சி உணவு பாதுகாப்பு துறையினர் முதலில் ஆய்வு செய்தனர். சுகாதாரமின்றி உணவுப் பண்டங்கள் தயாரிக்கப்படுவதாகக் கூறி கடையை பூட்டி சீல் வைக்கப்போவதாக அவர்கள் கூறினர்.
அப்போது அங்கு வந்த உள்ளூர் தி.மு.க. பிரமுகரான அமர்நாத், மாமுல் கேட்டு கொடுக்காததால் கடையை பூட்டி சீல் வைக்கிறீர்களா என்று வினவியதாக தெரிகிறது.
உடனே எதிரே இருந்த பழக்கடைக்கு சென்று ஆய்வு செய்த அதிகாரிகள், ரசாயனம் தடவி பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பதாகக் கூறி சீல் வைக்க முயன்றனர்.
அங்கு திரண்ட சிலர், எதிரே உள்ள டீக்கடைக்கு சீல் வைக்காமல் பழக்கடை மீது மட்டும் ஏன் நடவடிக்கை எடுக்கிறீர்கள் என்று கேட்டு வாக்குவாதம் செய்தனர்.
கடைசியில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திரும்பி சென்றனர். எவ்வித அழுத்தங்களுக்கும் பணியாமல், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தினர்.
Comments