கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணியின் சூட்கேஸ் திருட்டு... 2 மணி நேரத்தில் மடக்கிப் பிடித்து 14 சவரன் நகைகள் மீட்பு..!
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் பயணி வைத்திருந்த சூட்கேஸை திருடிய பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆவடியைச் சேர்ந்த வடிவேல் என்பவர் தனது மனைவியுடன் துறையூர் செல்லும் பேருந்தில், லக்கேஜ் கார்டில் 14 சவரன் தங்க நகை இருந்த சிவப்பு நிற சூட்கேஸை வைத்துள்ளார்.
அவர் தண்ணீர் வாங்கச் சென்ற நேரத்தில், சிவப்பு நிற டி சர்ட் அணிந்த மர்ம நபர் சூட்கேஸை திருடிச் சென்றுள்ளார்.
வடிவேல் அளித்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி கேமரா உதவியுடன் அந்த நபரை கோயம்பேடு போலீசார் அடையாளம் கண்டனர்.
தொடர்ந்து மூன்று குழுக்களாக பிரிந்த போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆட்டோ மூலம் கிண்டி கத்திபாரா வரைச் சென்று, சிவகங்கை செல்லும் பேருந்தில் ஏறி, டி சர்டை மாற்றி தப்பிக்க முயன்ற நபரை 2 மணி நேரத்தில் போலீசார் மடக்கிப் பிடித்து 14 சவரன் நகையை மீட்டனர்.
விசாரணையில் அந்த நபர் சிவகங்கையைச் சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரி சுந்தரலிங்கம் என்பதும், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வேலை தேடி செல்லும் இடங்களில், பணம், நகைகள் கொண்ட நம்பர் லாக் உள்ள பூட்டிய சூட்கேஸ்களை குறிவைத்து கைவரியைக் காட்டுவதும் தெரியவந்தது.
Comments