கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கத்தை மீட்ட கடலோர காவல்படை.... ரூ.20 கோடி மதிப்பிலான 32 கிலோ 869 கிராம் தங்கக்கட்டிகள் பறிமுதல்..!
ராமேசுவரம் அருகே கடலில் இருந்து சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய கடலோர காவல்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தங்கம் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து மண்டபம் நோக்கி புதன்கிழமை வந்த பைபர் படகு ஒன்றை மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் சுற்றி வளைத்தனர்.
அதிலிருந்த 3 பேரை விசாரித்த போது, இலங்கையைச் சேர்ந்த சிலர் தங்களிடம் 2 பார்சல்களை கொடுத்து அனுப்பியதாகவும், கடலோர காவல் அதிகாரிகளைக் கண்டதும் அவற்றை மணாலி தீவு பகுதியில் தூக்கி வீசிவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். உடனே, ஸ்கூபா டைவர்ஸ் மற்றும் முத்து குளிக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் கடலில் தங்கத்தை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது.
கடல் காற்றின் வேகம் அதிகமாக இருந்த போதிலும் தேடுதல் பணி இன்றும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. இதன் இறுதியில் பெரும் சிரமத்திற்கு இடையே ஸ்கூபா டைவர்கள் தங்கக்கட்டிகள் கொண்ட பார்சலை கண்டெடுத்தனர்.
மண்டபத்தில் உள்ள கடலோர காவல்படை முகாமிற்கு கடத்தல் தங்க பார்சலை கொண்டு சென்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான 32 கிலோ 869 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் செயப்பட்டுள்ளதாக இந்திய கடலோர காவல் படை அதிகாரபூர்மாக அறிவித்துள்ளது.
Comments