அடையாளத்தை மாற்றி அடுத்தவர் வாகனத்தை 4 ஆண்டுகள் ஓட்டிய போலீஸ்.... இதெல்லாம் நியாயமா ஆபிஸர்ஸ்....?

0 3519

செங்கல்பட்டில், விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனத்தை, வாகன உரிமையாளருக்குத் தெரியாமல் நம்பர் பிளேட் உள்ளிட்ட அடையாளங்களை மாற்றி 4 ஆண்டுகளாக தனிப்பிரிவு காவலர் ஒருவர் ஓட்டி வந்தது தெரிய வந்துள்ளது.

காவல் நிலையங்களை ஒட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இது போன்ற வாகனங்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு வழக்கின் கதை உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் ஜமீன்எண்டத்தூரைச் சேர்ந்த தனியார் தொழிற்சாலை ஊழியரான சிவபாலன் கடந்த 2019 ஆம் ஆண்டு ஓட்டிச் சென்ற ஹீரோ மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். வழக்குப்பதிவு செய்த சித்தாமூர் போலீஸார் அந்த டூவீலரை கைப்பற்றி காவல் நிலையம் கொண்டுச் சென்றனர். வாங்கி 4 மாதங்களே ஆகியிருந்ததால் வாரந்தோறும் காவல் நிலையத்திற்கு செல்வதும் தனது வாகனத்தை ஒப்படைக்குமாறு கேட்பதும் தனது வாராந்திர பழக்கமாகவே இருந்ததாக சிவபாலன் தெரிவித்தார்.

காவல் நிலையம் சென்ற போதெல்லாம், உளவுத்துறை போலீஸ்காரரான பக்தவச்சலம் தன்னை டீக்கடைக்கு அழைத்துச் சென்று டீ வாங்கிக் கொடுத்து சமாதானம் செய்து அனுப்பி வைப்பது வாடிக்கை என்கிறார், சிவபாலன்.

 இந்நிலையில், கடந்த 13-ஆம் தேதி சித்தாமூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் விஷச்சாராயம் அருந்தி 8 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கினை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வரும் நிலையில், சிவபாலனை தொலைபேசியில் தொடர்புக் கொண்ட பக்தவச்சலம், உனது வாகனம் ஸ்டேசனின் பின்னால் நிற்கிறது, உடனே சென்று எடுத்துக் கொள் என கூறியுள்ளார்.

பக்தவச்சலம் சொன்ன இடத்திற்கு சென்று பார்த்தபோது, இவ்வளவு நாட்களாக பக்தவச்சலம் ஓட்டி வந்த வாகனம் நம்பர் பிளேட் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்ததாக கூறுகிறார், சிவபாலன். வாகனத்தின் விலை உயர்ந்த பாகங்களுக்கு பதிலாக பழைய பாகங்கள் மாட்டப்பட்ட நிலையில் இருந்ததால், வாகனத்தின் எஞ்ஜின் எண்ணைக் கொண்டு தனது வாகனத்தை உறுதிப்படுத்திக் கொண்டார் சிவபாலன்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்பிரனீத்திடம் நேற்று கேட்டபோது, இந்த பிரச்சனை குறித்து தனக்கு எந்த புகாரும் வரவில்லையெனவும், உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பக்தவச்சலத்தை இன்று பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி நடவடிக்கை மேற்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments