வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. எஃப்-12..!
வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி.- எஃப்12 ராக்கெட், என்.வி.எஸ் - 01 வழிகாட்டி செயற்கைக் கோளை அதன் சுற்றுப்பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தியது.
சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து திட்டமிட்டபடி காலை 10.42 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி.- எஃப்12 ராக்கெட் நெருப்பை கக்கிக் கொண்டு விண்ணில் பாய்ந்தது.
ஏவப்பட்ட 19-ஆவது நிமிடத்தில் 2-ஆம் தலைமுறை தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட தரை, வான் மற்றும் கடல் போக்குவரத்தைக் கண்காணிக்கும் என்.வி.எஸ்-01 செயற்கைக் கோளை ஜி.எஸ்.எல்.வி.- எஃப்12 துல்லியமாக அதன் புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தியது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் இதை ஆரவாரத்துடன் கொண்டாடினர்.
அமெரிக்காவின் 'ஜி.பி.எஸ்.' போல், இந்தியாவுக்கு என பிரத்யேகமான வழிகாட்டியாக 'நேவிக்' தொழில்நுட்பம் வடிவமைக்கப்படுகிறது. அதற்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். வரிசையில் ஏழு செயற்கைக்கோள்கள் ஏற்கனவே ஏவப்பட்டன. இவற்றின் அடுத்தகட்டமாக அதிநவீன என்விஎஸ்-01 செயற்கைக் கோளை இஸ்ரோ வடிவமைத்து தற்போது விண்ணில் நிலை நிறுத்தி உள்ளது.
Comments