ரூல்ஸ் தெரியுமா.. ரூல்ஸ்..? போய் முதல்ல தெரிஞ்சிட்டு வாங்க.. போலீசுடன் மல்லுக்கு நின்ற பெண்.!
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வெளியே செல்லும் பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் உள்ளே நுழைந்ததற்காக தனது கணவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த போலீசாருடன் பெண் ஒருவர் மல்லுக்கு நின்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
ரூல்ஸ் தெரியுமா.. முதல்ல தெரிஞ்சிகிட்டு வாங்க.. என்று போலீசுடன் ஒரு பெண் மல்லுக்கு நின்ற இடம், திருப்பூர் மத்திய பேருந்து நிலையம். இங்கிருந்து பேருந்துகள் வெளியே செல்லும் வழியாக பிற வாகனங்கள் உள்ளே நுழையக் கூடாது என்பது விதி. அதற்கான அறிவிப்பு பலகையும் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ளது. அதை மீறி, விஜயன் என்பவர் தனது மனைவி மற்றும் மகளுடன் இரு சக்கர வாகனத்தில் நோ என்ட்ரி வழியாக வந்ததாக தெரிகிறது. இவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், ஒருவழிப்பாதையில் நுழைந்தது மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக மொத்தம் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
உடனே யாரிடம் கேட்கிறாய் அபராதம்.. எதற்கு கட்ட வேண்டும் ஃபைன் என்ற பாணியில் போலீசுடன் வாக்குவாதத்தைத் தொடங்கினார் விஜயனின் மனைவி. இதைக் கண்டு மிரண்டு போன போலீசார், விஜயன் மனைவி பேசியதை செல்ஃபோனில் படம்பிடிக்கத் தொடங்கினர்.
படம் பிடிக்க ஆரம்பித்ததும் இருவரும் கேமராவில் இடம் பெற வேண்டும் என்று போட்டி போட்டிக் கொண்டு ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார்களை கூறினர். போலீசார் கூறிய எதற்கும் சளைக்காத விஜயனின் மனைவி, தெரியாமல் வந்ததற்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதா என போலீசாரிடம் சரமாரி கேள்விகளை தொடுத்தார்.
இந்த வாக்குவாதம் நடந்து கொண்டிருந்த போதே, தனக்குத் தெரிந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட விஜயன், போலீசாரிடம் அவரிடம் பேசுமாறு செல்ஃபோனை நீட்டினார். ஆனால் அதை வாங்க போலீசார் மறுத்துவிட்டனர்.
விஜயனின் மனைவி எவ்வளவோ பேசியும் கூட மசியாத போலீசார், கடைசியில் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததற்கான ரசீதை விஜயன் கையில் கொடுத்து அதை நீதிமன்றத்தில் செலுத்திவிடுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
Comments