தமிழகத்தின் செங்கோலுடன் புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு..!
டெல்லியில் 971 கோடி ரூபாய் செலவில் அதிநவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
96 ஆண்டுகள் பழமையான பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தில் தற்போதைய தேவைக்கேற்ப போதுமான இடவசதி இல்லாத நிலையில், டெல்லியின் மையப்பகுதியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்வேறு வகையான பொருட்கள் பெறப்பட்டு கட்டுமானத்திலும், உட்புற அழகை மெருகேற்றுவதற்கும் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
நாடாளுமன்றத் திறப்பு விழாவையொட்டி யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அதன்பிறகு பாரம்பரிய முறைப்படி பிரதமர் மோடியிடம் தமிழகத்தின் செங்கோல் வழங்கப்படவுள்ளது.
முற்பகல் 11.30 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய நாடாளுமன்றத்தை, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.
புதிய நாடாளுமன்றக் கட்டடத் தோற்றத்துடன் 75 ரூபாய் சிறப்பு நாணயத்தையும் பிரதமர் வெளியிடுகிறார். இவ்விழாவில் மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், எம்.பி.க்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
நாடாளுமன்றத் திறப்பு விழாவையொட்டி, டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, நகரின் முக்கிய சாலைகள் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
Comments