வனத்துறை வைத்த சீலை அகற்றி பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரங்களை விற்ற திமுக பிரமுகருக்கு போலீஸ் வலைவீச்சு..!
மரக்கடைக்கு வனத்துறை அதிகாரிகள் வைத்த சீலை அகற்றி பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரங்களை விற்பனை செய்ததாக திமுக பிரமுகரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டைச் சேர்ந்த திமுக பிரமுகர் கண்ணன் என்பவருக்கு சொந்தமான கே.கே.ஜி. என்ற மரக்கடையை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திறந்து வைத்தார். மரக்கடைக்கு வனத்துறை அனுமதி இல்லாததால் மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
இருந்தபோதிலும் வனத்துறை அனுமதி இல்லாமல் கண்ணன் மரங்களை விற்பனை செய்து வந்ததால், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மரக்கடைக்கு வனத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இந்நிலையில் சீலை உடைத்து மரக்கடையிலிருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மரங்களை கண்ணன் விற்பனை செய்து வந்துள்ளார்.
இதுதொடர்பாக விசாரிக்க சென்ற வனத்துறை அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து வனச்சரக அலுவலர் நடுவீரப்பட்டு போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில், கண்ணன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாகிய கண்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments