ஆயிரக்கணக்கில் முட்டைகள்.. அலர்ட்டாக பாதுகாக்கும் பறவைகள்..! சதுப்பு நிலத்தில் ஒரு சுவாரஸ்யம்.!!
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள சதுப்பு நிலப்பகுதியில் முகாமிட்டுள்ள நெடுங்கால் உள்ளான் பறவைகள், ஆயிரக்கணக்கில் முட்டைகள் இட்டு குஞ்சு பொறிக்க காத்திருக்கின்றன.
இது தமிழ்நாட்டின் பெரிய கண்மாய்களில் ஒன்றான நிலையூர். மதுரை திருப்பரங்குன்றத்துக்கு அருகே 742 ஏக்கரில் பரந்து விரிந்திருக்கும் இந்த கண்மாய் தான், சுற்றியுள்ள 25-க்கும் அதிகமாக கிராமங்களில் பாசனத்துக்கும் குடிநீருக்கும் ஆதாரம். இந்த கண்மாயை சுற்றி உள்ள சதுப்பு நிலப்பகுதி முழுவதும் தரையில் ஆங்காங்கே கூடு கட்டி ஆயிரக்கணக்கில் முட்டையிட்டு உள்ளன நெடுங்கால் உள்ளான்கள்.
எப்போதும் கூட்டமாகவே காணப்படும் இயல்பைக் கொண்ட இந்தப் பறவைகள், கண்மாய் நீருக்கு அருகில், அருகருகே குச்சிகளால் வட்ட வடிவில் கூடுகளை அமைத்துள்ளன. ஆண், பெண் உள்ளான்கள் இரண்டும் இணையாக சேர்ந்து அவற்றின் முட்டைகளை பாதுகாத்து வருகின்றன.
பொதுவாகவே தன் எல்லைக்குள் வேறு பறவைகள் வந்தால் இந்த நெடுங்கால் உள்ளான்கள் சத்தம் எழுப்பித் துரத்தும். தற்போது முட்டையிட்டு வேறு இருப்பதால், இங்கு மற்ற எந்தப் பறவையும் நுழையாமல் எங்கு பார்த்தாலும் நெடுங்கால் உள்ளான்களாகவே காட்சி தருகின்றன.
பொதுவாகவே மீன்கள் நிறைந்து காணப்படும் நிலையூர் கண்மாய், நெடுங்கால் உள்ளான்களுக்கு குறையாத உணவு ஆதாரமாக உள்ளது. யாரும் எளிதில் நெருங்கமுடியாத வகையில் இயற்கை அரணாகவும் நெடுங்கால் உள்ளான் பறவைகளுக்கு இந்தக் கண்மாய் பகுதி அமைந்துள்ளது.
Comments