வீட்டில் காதலி போராட்டம்... கோயிலில் மற்றொரு திருமணம்... மாப்பிள்ளையை மடக்கிய போலீஸ்... காதலால் கவிழ்ந்த எம்.ஏ., பி.எட்
10 ஆண்டு கால காதலியை திருமணம் செய்த 3-ஆவது நாளிலேயே, வேறொரு பெண்ணை கோயிலில் வைத்து திருமணம் செய்தவரை மணக்கோலத்திலேயே கைது செய்துள்ளது போலீஸ். கைவிட்டுச் சென்ற கணவனை விடிய விடிய தர்ணா நடத்தி அந்தப் பெண் கம்பி எண்ண வைத்துள்ளார்.
வாசலில் வாழைத்தோரணம் கட்டி திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த வீட்டின் முன்பு ஒற்றை ஆளாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட இவர் தான் கடலூர் மாவட்டம் எல்.என்.புரத்தைச் சேர்ந்த ரம்யா.
தன்னை 10 ஆண்டுகளாக காதலித்து ஊர் சுற்றியதோடு, கடந்த 22-ஆம் தேதி திருமணம் செய்துக் கொண்ட ஆர்.எஸ். மணிநகரைச் சேர்ந்த சுப்ரமணியன், 25-ஆம் தேதி வேறொரு பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள உள்ளதாக ரம்யாவிற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த ரம்யா, புதன்கிழமை இரவு சுப்ரமணியன் வீட்டின் முன்பு தர்ணாவில் அமர்ந்தார்.
போலீஸார் விசாரணையில், சுப்ரமணியனுக்கு திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலில் அதிகாலையில் திருமணம் நடைபெற உள்ளது தெரிய வந்தது.
போலீஸார் தேடுவதைத் தெரிந்துக் கொண்ட சுப்ரமணியன், செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டு தலைமறைவாக, குடும்பத்தினரோ திருமணத்திற்கான ஏற்பாடுகளை ரகசியமாக செய்து வந்தனர். திருவந்திபுரத்திற்கு போலீஸார் நேரடியாக சென்ற போது, அங்கு ஒரே முகூர்த்த நேரத்தில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றதால் சுப்ரமணியனை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, கோயில் வாசலில் காத்திருந்த போலீஸார், தாலி கட்டி விட்டு புன்னகையோடு வெளியே வந்தவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
மாமியார் வீட்டில் விருந்து சாப்பிடலாமென நினைத்த சுப்ரமணியனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ரம்யாவின் தந்தை நடத்தி வரும் மெக்கானிக் ஷாப்பில் வேலைப்பார்த்து வந்த போது எம்.ஏ., பி.எட் படித்திருந்த ரம்யாவை சுப்ரமணியன் காதல் வலையில் வீழ்த்தி பல இடங்களுக்கு அழைத்துச் சென்று தனிமையில் இருந்தது தெரிய வந்தது. இதில், கர்ப்பமடைந்த ரம்யா தன்னை திருமணம் செய்துக் கொள்ளுமாறு வற்புறுத்தவே ஜாதியை காரணம் காட்டி சுப்ரமணியன் மறுத்ததாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு போலீஸில் புகார் அளித்தார் ரம்யா. தன் மீதான புகாரை திரும்ப பெறுவதோடு, கருவையும் கலைத்து விட்டால் திருமணம் செய்துக் கொள்வதாக சுப்ரமணியன் கூறவே, அதன்படியே ரம்யா கருவை கலைத்ததோடு, புகாரை திரும்பப் பெற்றதாக கூறப்படுகிறது.
மறுபுறம், சுப்ரமணியனுக்கு அவசர அவசரமாக அவரது குடும்பத்தினர் வேறு இடத்தில் பெண் பார்த்து நிச்சயமும் செய்தனர். ஆனாலும், ரம்யாவுடன் வாட்ஸ் அப்பில் உரையாடிக் கொண்டே இருந்த சுப்ரமணியன், விழுப்புரத்திலுள்ள குலதெய்வம் கோயிலுக்கு அவரை அழைத்துச் சென்று 22ம் தேதி திருமணம் செய்துக் கொண்டதும் விசாரணையில் தெரிய வந்தது.
இந்த பிரச்சினைகள் பற்றி அறிந்த ரம்யாவின் குடும்பத்தினர், அவரை வீட்டுக்கு வரக்கூடாது என்று கூறிவிட்டதால், அடுத்த என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார் ரம்யா.
Comments