ஆட்சியரின் வீட்டுப்பொருட்களை ஏற்றிச் சென்ற லாரியை வழிமறித்து கத்திமுனையில் பணம் பறிப்பு
ஈரோடு மாவட்ட ஆட்சியரின் வீட்டுப்பொருட்களை ஏற்றிச்சென்ற லாரியை வழிமறித்து, ஓட்டுநரிடம் கத்திமுனையில் 10 ஆயிரம் ரூபாயை, கொள்ளையர்கள் பறித்து சென்றுள்ளனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியராக இருந்த கிருஷ்ணன் உன்னி, சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், தனது பங்களாவில் இருந்த உடைமைகளை, மினி லாரியில் ஏற்றி, திருவனந்தபுரத்திலுள்ள தனது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். கோவை மதுக்கரை நீலாம்பூர் பைபாசில் கஞ்சிகோணம்பாளையம் அருகே நேற்றிரவு மினிலாரியை, பைக்கில் வந்த 3 பேர் வழிமறித்துள்ளனர்.
லாரியின் டயர் பஞ்சராகி விட்டதாக அவர்கள் கூறியதை நம்பிய ஓட்டுநர் முத்துகிருஷ்ணன், லாரியை ஓரமாக நிறுத்தி இறங்கி டயரை சோதித்துள்ளார். அப்போது, அம்மூவரும் கத்தியை காட்டி மிரட்டி, முத்துகிருஷ்ணனிடம் இருந்து, 10 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு, தப்பிச் சென்றனர்.
முத்துகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், 2 தனிப்படைகளை அமைத்துள்ள போத்தனூர் போலீசார், பைபாஸ் சாலையிலுள்ள கண்காணிப்பு கேமரா, சுங்கச்சாவடி கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Comments