''கள்ளச்சந்தையில் மது அருந்தி இருவர் உயிரிழந்ததற்கு மதுவில் கலந்திருந்த சயனைடு தான் காரணம்'' - தஞ்சை மாவட்ட ஆட்சியர் விளக்கம்
தஞ்சாவூரில், கள்ளச்சந்தையில் மது வாங்கி குடித்து வாயில் நுரை தள்ளி இருவர் உயிரிழந்த விவகாரத்தில், திடீர் திருப்பமாக உடற்கூறாய்வில் சயனைடு விஷம் கலந்திருப்பது தெரியவந்து உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் தெரிவித்து உள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கீழ அலங்கம் பகுதியில், அரசு மதுபானக்கடை ஒட்டி அரசு அனுமதி பெற்ற பாரில் விற்பனை நேரத்திற்கு முன்னதாக கள்ளச்சந்தையில் மது வாங்கி குடித்த கீழவாசல் பகுதியை சேர்ந்த மீன் வியாபாரிகளான குப்புசாமி மற்றும் விவேக் ஆகியோர் அடுத்தடுத்து வாயில் நுரை தள்ளி உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மது பாட்டில்களை ஆய்வு செய்தனர்.
அப்போது, அங்கு திரண்டிருந்த குடிமகன்கள் டாஸ்மாக் உதவி மேலாளர் தங்க பிரபாகரனை தாக்கி பாருக்குள் தள்ளி சிறை பிடித்தனர். அனுமதிபெற்று இயங்கி வந்த பாரில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, பார் உரிமையாளர் பழனி மீது வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட பாருக்கும், டாஸ்மாக் கடைக்கும் தஞ்சை பொறுப்பு கோட்டாட்சியர் தலைமையில் சீல் வைக்கப்பட்டது. மேலும், பாரில் இருந்த மதுபானங்கள் ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டன.
மது அருந்தி இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தனர். மது அருந்தி பலியான இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, இருவரது வயிற்றுப் பகுதி, கல்லீரல், சிறுநீரகம் ஆகிய உடல்பாகங்களின் மாதிரிகள் தஞ்சாவூர் மண்டல தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டதாகவும், ஆய்வறிக்கையில் இருவரது உடல்பாகங்களிலும் மெத்தனால் இல்லை என்பதும், சயனைடு விஷம் இருந்தது தெரியவந்து உள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.
இருவரும் தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது கொலை செய்யப்பட்டனரா? என்பது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருவதாகவும், விசாரணையின் முடிவில் முழு விவரங்களும் தெரியவரும் என்றார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுக் கப்படும் என்றும் ஆட்சியர் உறுதி அளித்தார்.
இதனிடையே, மது குடித்து 2 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தனியார் பார் உரிமையாளர் மற்றும் பார் ஊழியர் கைது செய்யப்பட்டனர். மேலும், சம்மந்தப்பட்ட மதுக் கடையின் மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்கள் 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனிடையே, வழக்கு தொடர்பாக இரண்டு ஏ.டி.எஸ்.பி.க்கள், நான்கு டி.எஸ்.பி.க்கள் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
Comments