இருட்டு அறைக்குள் புகுந்த திருட்டுப் பூனையை நையப்புடைத்த இளம் ஜோடி.! நடிகையின் ரிசார்ட்டில் சம்பவம்

0 3412

கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் அருகே நடிகையின் கணவருக்கு சொந்தமான பீச் ரிசார்ட்டில் காதலர்கள் தங்கி இருந்த அறைக்குள் செல்போனுடன் பதுங்கி இருந்த ரிசார்ட் ஊழியரை நள்ளிரவில் கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

கல்பாக்கம் அருகே கூவத்தூர் அடுத்துள்ள பரமன்கேனியில் நடிகை காதல் சந்தியாவின் கணவர் வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான பேர்ல் பீச் என்ற ரிசார்ட் உள்ளது.

வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களுக்கு இந்த பீச் ரிசார்ட்டில் உள்ள வில்லா வீடுகளில் தங்குவதற்காக சென்னை கே.கே. நகர் பகுதியை சேந்த இன்டீரியர் டெக்கரேட் ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் என்பவர் தனது நட்பு வட்டாரத்தை சேர்ந்த குடும்பத்தினருடன் சென்றார். 3 அறைகளில் மொத்தம் 8 பேர் தங்கினர். அதில் ஒரு அறையில் ராமச்சந்திரன் தனது வருங்கால மனைவியான காதலியுடன் தங்கி இருந்தார்.

முதல் நாள் ரிசார்ட்டில் உற்சாகமாக பொழுதை கழித்த நிலையில் சம்பவத்தன்று இரவு, அவரவர் அறையில் அனைவரும் படுக்கச் சென்றுள்ளனர்.நள்ளிரவில் ராமச்சந்திரனை அவசரமாக எழுப்பிய அவரது காதலி, இந்த அறையில் நாம் இருவரை தவிர 3 வதாக ஒருவர் இருப்பது போல தெரிகிறது என்று கூறி உள்ளார்.

உடனடியாக எழுந்து விளக்குகளை எரியவிட்டு அறைமுழுவதும் தேடிப்பார்த்துள்ளனர். எவரும் இல்லை, புதிய இடம் என்பதால் அப்படி தோன்றி இருக்கலாம் என்று நினைத்து விளக்குகளை அணைத்துள்ளனர். சிறிது நேரத்தில் ராமச்சந்திரன் கண் அயர்ந்ததும், அறைக்குள் ஒருவர் இருப்பதாக கூறி மீண்டும் அவரது காதலி சத்தமிட்டதால் , உஷாரான ராமச்சந்திரன் இந்த முறை அந்த அறையில் இருந்த பீரோ, ஷோபா, கட்டிலுக்கு அடியில் என ஒன்று விடாமல் தேடியுள்ளார்.

அப்போது கட்டிலுக்கு அடியில் செல்போன் வெளிச்சம் தெரியவே கையை விட்டு துளாவிய போது உள்ளே ஒருவன் பதுங்கி இருப்பது தெரியவந்தது.அடுத்த நொடி அவனை வெளியே இழுத்த ராமச்சந்திரன் அந்த ஆசாமியை அடி வெளுத்துள்ளார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து அறைகளில் தங்கி இருந்தவர்களும் வந்து அவனை நையப்புடைத்துள்ளனர்.

விசாரணையில் அவன் அந்த ரிசார்ட்டில் ரூம் பாயாக வேலைபார்த்து வரும் திருச்சினாங் குப்பத்தை சேர்ந்த சுபாஷ் என்பது தெரியவந்தது.அவனிடம் இருந்த செல்போனை வாங்கிப்பார்த்த போது அதில் இவருடன் வந்த நண்பர்கள் வீட்டு பெண்கள் நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோ மற்றும் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளது.

இதையடுத்து அவனை போலீசில் ஒப்படைக்க முயன்ற போது, குப்பத்து இளைஞரை ரிசார்ட்டுக்கு வந்தவர்கள் தாக்கிவிட்டதாக கூறி பெரும் கூட்டம் திரண்டு வந்துள்ளது.அதற்குள்ளாக தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், காயம் அடைந்த ரூம் பாய் சுபாஷை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். குப்பத்து மக்களிடம் ரூம் பாய் செய்த சேட்டைகளை கூறியதும் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சுபாஷ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவனது செல்போனை கைப்பற்றி விசாரித்தனர்.

ராமச்சந்திரன் தங்கி இருந்த அறையில் உள் பக்கம் தாழிடும் தாழ்பாள் வசதி ஏதும் இல்லை, உருண்டை வடிவிலான லாக் சிஸ்டம் மட்டுமே உள்ளது.அதனையும் சாவி கொண்டு பூட்டினால் மட்டுமே வெளியில் இருந்து யாரும் திறக்க இயலாது. ஆனால் ராமச்சந்திரன் சாவிகொண்டு பூட்டாமல் சாதாரணமாக கதவை பூட்டி வைத்திருந்ததை தனக்கு சாதகமாக்கிய சுபாஷ், இரவு வேளையில், எளிதாக அந்த அறைக்குள் நுழைந்து அவரது காதலி படுக்கையில் இருப்பதை செல்போனில் படம்பிடிக்க முயன்றுள்ளான். அதற்குள்ளாக அவர்களுக்கு சந்தேகம் எழவே கையும் களவுமாக சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

ஓட்டல் மற்றும் தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்கும் ஜோடிகள் உள்பக்கம் தாழ்பாள் சரியாக உள்ளதா ? அறைக்குள் வெளியாட்கள் எளிதாக நுழைய வேறு வழிகள் உள்ளதா ? என்பதை சரி பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்று சுட்டிக் காட்டுகின்றனர் போலீசார்.

இதற்கிடையே சுபாஷின் உறவினர்கள் அளித்த புகாரில், ராமச்சந்திரன் உள்ளிட்ட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments