ஜப்பானில் நடைபெறும் ஜி7 மாநாடு... உலக நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை... ஜோ பைடனை ஆரத்தழுவி வாழ்த்திய பிரதமர் மோடி...!
ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்து இந்தியாவுடனான பரஸ்பர விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் தொடங்கிய ஜி7 நாடுகளின் உச்சி மாநாடு வரும் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட உறுப்பு நாடுகளும், இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நட்பு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார்.
உச்சிமாநாட்டிற்கு இடையே, பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிதாவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். ஜப்பானிய உயர்தொழில்நுட்பம், திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்வது குறித்து அப்போது இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தென்கொரிய அதிபர் யூன் சுக் யூலையும், வியட்நாம் பிரதமர் ஃபாம் மின் சின்னையும் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, இருதரப்பு விவகாரங்கள் மற்றும் பரஸ்பர வளர்ச்சித்திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
முன்னதாக, ஹிரோஷிமா நகரில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்தும் காந்திய கொள்கைகள் உலகளவில் கோடிக்கணக்கானோருக்கு வலிமையை தருவதாக பிரதமர் மோடி கூறினார்.
மேலும், பிரதமர் மோடியை சந்தித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தினார். உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கியதிலிருந்து முதல்முறையாக, இருநாட்டு தலைவர்களும் ஹிரோஷிமாவில் நேரில் சந்தித்தனர்.
உக்ரைன் போரை பொருளாதாரம் மற்றும் அரசியல் சார்ந்த பிரச்சனையாக மட்டும் பார்க்காமல், மனிதநேய பிரச்சனையாக தான் கருதுவதாக பிரதமர் குறிப்பிட்டார். மேலும், போருக்கு தீர்வு காண இந்தியாவால் முடிந்தவரை அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
அதேபோல், வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு பற்றியும் பிரதமர் மோடி - பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதனிடையே, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்புடன் நடைபெற்ற குவாட் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
சர்வதேச நன்மைக்கான முயற்சிகளை குவாட் நாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் 2024ஆம் ஆண்டில் உச்சிமாநாட்டை இந்தியா நடத்துவதில் மகிழ்ச்சி என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
Comments