ஸ்டான்லி மருத்துவமனையில் வலிப்பு நோய் பிரச்சனையால் அனுமதிக்கப்பட்ட தண்டனை கைதி தப்பி ஓட்டம்...!
10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து தப்பியோடியுள்ளான்.
ராயபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்ற அந்த நபர், கடந்த 2017ஆம் ஆண்டு பெண் ஒருவரைத் தாக்கி 8 சவரன் தங்க நகையை பறித்துச் சென்றது தொடர்பாக கைது செய்யப்பட்டான். ஆறு ஆண்டுகள் நடந்த வழக்கில் கடந்த 16 ஆம் தேதி சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
இதையடுத்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்படவே, புழல் சிறைக்கு மாற்றப்பட்டான்.
அங்கு அவனுக்கு வலிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சேர்க்கப்பட்டான். பாதுகாப்புக்கு 2 காவலர்கள் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை அவர்களின் கவனத்தை திசை திருப்பிவிட்டு சீனிவாசன் தப்பியோடியுள்ளான். அவனைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
Comments