எல்லையில் நின்று சம்பாதித்த பணம்... முகம் தெரியாத மோசடி கும்பலிடம் இழந்த முன்னாள் இராணுவ வீரர்!

0 3107

புதுச்சேரியில் சமூக வலைதளங்கள் மூலம் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்ட முன்னாள் ராணுவ வீரர், இன்ஸ்டாகிராமில் அறிமுகமான போலி நிறுவனத்திடம் 62 லட்ச ரூபாயை இழந்துள்ளார். "சின்ன மீனைப் போட்டு பெரிய மீனை பிடிப்பது" போல் முதலில் முதலீடு செய்த சிறிய தொகையைத் திருப்பிக் கொடுத்து நம்பிக்கையை ஏற்படுத்தி, அடுத்தடுத்து முதலீடு செய்யவைத்து மோசடி செய்துள்ளனர்.

புதுச்சேரி முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்த 56 வயதான முருகன் என்ற அந்த முன்னாள் ராணுவ வீரர், சமூக வலைதளங்கள் மூலமாக பணம் சம்பாதிக்க ஏதேனும் வழியுள்ளதா என்று தன்னுடைய செல்போனில் தேடியுள்ளார். அப்போது இன்ஸ்டாகிராமில் "என்டர்டைன்மென்ட் ஒன்"ன் என்ற போலி நிறுவனத்திலிருந்து ஒரு லிங்க் வந்துள்ளது.

அதில் பதிவிட்டிருந்த மர்ம நபர்கள், நீங்கள் முதலீடு செய்யும் பணத்துக்கு 20 சதவீதம் அன்றைய தினமே உங்களுக்கு வருமானம் கிடைக்கும் என்றும், முதல் முறை முதலீடு செய்யும் பணத்துக்கு ஈடாக அதே அளவு பணம் போனஸாக தருவோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை நம்பிய முருகன் கடந்த ஜனவரி மாதம் ரூ.10,500 முதலீடு செய்துள்ளார். அவர்களும் அதற்கு ஈடாக ரூ.10,500 பணத்தை போட்டு 30 வீடியோக்களை அனுப்பி விமர்சனம்  செய்ய வேண்டும் என்று சொல்லியுள்ளனர். அதனை பார்த்து விமர்சனம் சொன்னதும் அவரது வங்கி கணக்கில் ரூ.22 ஆயிரம் பணம் அனுப்பியுள்ளனர்.

இதனால் மிகுந்த நம்பிக்கையடைந்த முருகன் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ரூ.32 லட்சத்தை மர்ம நபர்கள் சொல்லும் பல்வேறு வங்கி கணக்குகளில் முதலீடு செய்துள்ளார். இதையடுத்து அவர் சம்பாதித்த லாபத்துடன் சேர்த்து வங்கி கணக்கில் ரூ.58 லட்சம் பணம் இருப்பதாக அந்த என்டர்டைன்மென்ட் ஒன் ஆப்பில் காட்டியுள்ளது.

அந்தப் பணத்தை முருகன் எடுக்க முயற்சித்தபோது, பிழைகாட்டுகிறது என்றும், இதற்கு நீங்கள் வரி கட்டினால் அந்தப் பணத்தை எடுக்க முடியும் என்று கூறவே, மீண்டும் அவர்கள் சொன்ன பல வங்கி கணக்குகளில் மேலும் பணத்தை செலுத்தியுள்ளார். இதுபோல் அவர் ரூ.61 லட்சத்து 79 ஆயிரம் பணம் செலுத்தியுள்ளார்.

இதனால் அவரது கணக்கில் மொத்தமாக ரூ.1.15 கோடி இருப்பதாக காட்டுவதாகவும், அந்தப் பணத்தை எடுக்க இன்னமும் வரி செலுத்த வேண்டும் என்றும் மர்ம நபர்கள் கூறியுள்ளனர். அப்போதுதான் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார் முருகன் .அவர் அளித்த புகாரின் பேரில் புதுவை சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments