அமைச்சரின் கார் மோதிய வேகத்தில் புது மாப்பிள்ளை பலி..! கட்டுபாடில்லாத வேகத்தால் விபரீதம்
மாமல்லபுரம் அருகே சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனின் கார், புதுமணத் தம்பதி சென்ற பைக் மீது அதிவேகத்தில் மோதியதில் புது மாப்பிள்ளை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூரில் இருந்து கிழக்குக் கடற்கரை சாலை வழியே புதுமணத் தம்பதியான ஜான்சன் - ரூத்பொன் செல்வி ஆகியோர் பைக்கில் சென்னை நோக்கி மாமல்லபுரம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதி வேகத்தில் வந்த இன்னோவா கார் ஒன்று, பயங்கரமாக மோதியதில் ஜான்சன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பலத்தகாயங்களுடன் மீட்கப்பட்ட புதுப்பெண் ரூத்பொன்செல்வி,சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விசாரணையில் விபத்துக்குள்ளான கார், அமைச்சர் மெய்யநாதனின் அலுவலர் பயன்பாட்டிற்கு என்று ஒதுக்கப்பட்ட கார் என்றும், அரசு வாகனமான அந்தக் காரை இரு தினங்களுக்கு முன் பர்மிட் தொடர்பான பணிக்காக சென்னையில் விட்டுவிட்டு, தனது சொந்தக் காரில் அமைச்சர் மெய்யநாதன் மயிலாடுதுறை சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆர்.டி.ஓ பணி முடிந்த நிலையில், அமைச்சரை அழைத்து வருவதற்காக அவரது பி.ஏவும் , ஓட்டுநரும் காரை மயிலாடுதுறைக்கு எடுத்துச்சென்றுள்ளர். கார் அதிவேகத்தில் சென்றதல் இந்த விபத்து நேர்ந்ததாக சொல்லப்படுகிறது.
உயிரிழந்த புதுமாப்பிள்ளை ஜான்சன் தலைக்கவசத்தை அணியாமல் பெட்ரோல் டேங்க் மீது வைத்திருந்தால் தலையில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்ததாக கூறும் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமண வாழ்க்கையை இன்னும் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அமைச்சரின் கார் மோதி புது மாப்பிள்ளை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Comments