ரோட்டில் சீறிப்பாய்ந்த டூவீலர்கள்.. வழிவிடாத பேருந்து ஓட்டுநரை விரட்டிச் சென்று தாக்குதல்.. வழிவிட முடியாதது ஒரு குத்தமாய்யா..?

0 1805

ஹீரோயிசம் காட்டுவதற்காக டூவீலரை முறுக்கிக் கொண்டுச் சென்றவர்களுக்கு வழிவிட மறுத்ததாகக் கூறி தனியார் பேருந்தை வழிமறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை தாக்கிய 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். கும்பகோணம் அருகே இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது...

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து திருவிடைச்சேரிக்கு சென்றுக் கொண்டிருந்தது தனியார் பேருந்து ஒன்று. இதன் பின்னார் 2 மோட்டார் சைக்கிளில் கட் அடித்துக் கொண்டு வேகமாக வந்த 5 பேர், தங்களுக்கு வழிவிடுமாறு விடாமல் ஹாரன் அடித்துள்ளனர். குறுகிய சாலை என்பதால் வழிவிட முடியாத நிலையில் பேருந்து ஓட்டுநர் இருந்ததாக தெரிகிறது.

ஹாரன் அடித்தும் வழிகிடைக்காத ஆத்திரத்திலிருந்த இளைஞர்கள் கூகூர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விட நின்ற பேருந்தை மறித்து தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்தினர். பேருந்திற்குள் ஏறிச் சென்று, எங்களுக்கு வழிவிடாமல் எப்படி இருக்கலாமெனக் கேட்டு ஓட்டுநர் மற்றும் நடத்துநரை சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர்.

மோதலைப் பார்த்து பேருந்திலிருந்து ஒரு சில பயணிகளும் இறங்கிச் சென்று விட, பேருந்து நிறுத்ததில் நின்றிருந்த பச்சைத் துண்டு அணிந்த நபர் ஒருவர் பேருந்துக்குள் சென்று தாக்குதல் நடத்தியவர்களை சமாதானப்படுத்தி விரட்டினார். அதில், ஒருவன் மட்டும் திமிறிக் கொண்டு வர அவனது மண்டையில் தட்டி கீழே இறக்கி விட்டார்.

இதுகுறித்து நடத்துநர் அருண்குமார் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த நாச்சியார்கோயில் போலீஸார், பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவை கைப்பற்றி தாக்குதலில் ஈடுபட்ட கூகூரைச் சேர்ந்த தமிழழகன், ரவிச்சந்திரன், பாண்டியன், மகேஷ் பாபு, பவித்ரன் ஆகிய 5 பேரையும் சில மணி நேரத்தில் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments