சித்தராமையா பதவியேற்பு விழாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு
கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், பெங்களூருவில் அவரது பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால் மற்றும் ரந்தீப் சுர்ஜேவாலா, சனிக்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு பெங்களூருவில் பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவித்தனர். தகுதி வாய்ந்த தலைவர்கள் பலர் இருப்பதால் முதலமைச்சரை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும், ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தற்போது முடிவு எட்டப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் விளக்கமளித்தனர்.
காங்கிரஸ் மேலிட அறிவிப்பால் தாம் அதிருப்தியில் இல்லை என துணை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். சித்தராமையாவுடன் அவர் ஒரே காரில் ஏறி, கார்கே இல்லத்திற்கு சென்றார்.
பதவியேற்பு விழா நடைபெறும் பெங்களூருவின் ஸ்ரீ கன்டீரவா மைதானத்தில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகின்றன. விழாவில் பங்கேற்க வருமாறு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விடுத்த அழைப்பை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஏற்றுக் கொண்டுள்ளார்.
விழாவில் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக்கட்சிகள் ஆளும் மாநில முதலமைச்சர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.
Comments