என் மகனை கொன்னுட்டு கண் முன்னாடி அலைகிறார்கள்... பழிக்குப் பழி தீர்த்த தந்தை
கிருஷ்ணகிரி அருகே தன் மகனை கொலை செய்தவர்களை 2 லட்சம் ரூபாய்க்கு கூலிப்படை அமைத்து தந்தை தீர்த்துக் கட்டிய சம்பவம் அரங்கேறி உள்ளது. பழிக்கு பழி வாங்கிய அந்தத் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சொப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் மகன் திலக். இவர் கடந்த 12ஆம் தேதி ஓசூர் ரிங் ரோடு பெரியார் நகர் பகுதியில் உள்ள டீ கடை ஒன்றில் நண்பர்களுடன் டீ குடித்து கொண்டிருந்தார். அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல், திடீரென திலக்கை கத்தியால் குத்த, சம்பவ இடத்திலேயே அவர் சரிந்து விழுந்து பலியானார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஓசூர் உதவி காவல் கண்காணிப்பாளர் பாபு பிரசாத் கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டார். முதல் கட்ட விசாரணையில் மத்திகிரி பகுதியில் கடந்த 2022ஆம் வருடம் மோகன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பழி தீர்க்கும் வகையில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரிக்கப்பட்டது.
இதன் பேரில் மோகனின் தந்தை செப்பட்டி கிராமத்தை சேர்ந்த திம்மராயப்பன் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர் . விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளியானது. அதாவது, கிரிக்கெட் விளையாடும் போது, ஏற்பட்ட தகராறில் திலக் உள்பட 6 பேர் சேர்ந்து திம்மராயப்பனின் மகன் மோகனை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்துள்ளனர். இதற்கு பழிவாங்கும் விதமாக, குதிரை பாளையத்தை சேர்ந்த சசிகுமார் என்பவருக்கு ரூபாய் 2 லட்சம் கொடுத்து திலக்கை கொலை செய்ய திம்மராயப்பன் திட்டம் தீட்டியுள்ளார். இதற்கு, திம்மராயப்பனின் அண்ணன் மகன் சிவக்குமார் மற்றும் கொலையான மோகனின் நண்பர் வெங்கடேஷ் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.
மகன் கொலைக்கு பழிக்கு பழி தீர்க்கவே திலக்கை கத்தியால் குத்தி கொன்றதாக கைது செய்யப்பட்ட திம்மராயப்பன் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து திம்மராயப்பன் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஜாமினில் வந்த திலக்கை உரிய முறையில் கண்காணிக்காததாலும், உரிய பாதுகாப்பு வழங்காமலும் பணியில் மெத்தனம் காட்டியதாகவும் மத்திகிரி காவல் ஆய்வாளர் சாவித்திரி மற்றும் உதவி ஆய்வாளர் சிற்றரசு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
Comments