தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடையில்லை - உச்சநீதிமன்றம்
ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் சட்டத்துக்கு எதிராக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. மாநில அரசு கொண்டு வந்த அவசர சட்டம் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளதாகவும், அந்த சட்டத்தின் மூலம் காளைகள் துன்புறுத்தல் பெருமளவு குறைந்துள்ளதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
கலாச்சாரத்தின் ஒரு பகுதி ஜல்லிக்கட்டு என்று அரசு இயற்றியுள்ள சட்டத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் கூறினர். ஜல்லிக்கட்டைப் போலவே, கர்நாடகாவின் கம்பாலா, மராட்டியத்தின் சக்கடி விளையாட்டுகளுக்கும் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என தீர்ப்பிற்கு பின் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
Comments