ரூ.1000 கோடி இருக்கா..? லைகா அலுவலகத்தில் துருவித் துருவி விசாரணை..! அன்றே கணித்தார் பார்த்திபன்

0 15446

பொன்னியின் செல்வன் 2 படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில், இந்த படம் 1000 கோடி ரூபாய் வசூலை அள்ளும் என்றும் படத்தயாரிப்பு நிறுவனத்தில் சென்று சோதனையிடுமாறும் வருமானவரித்துறைக்கு படத்தில் சின்னபழுவேட்டரையராக நடித்திருந்த பார்த்திபன் அழைப்பு விடுத்த நிலையில் 2 நாட்களாக லைகா நிறுவனம் மற்றும் அவர்களுடன் தொடர்புள்ள நபர்களிடம் அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

எந்த நேரத்தில் பொன்னியின் செல்வன் 2 படம், 1000 கோடி ரூபாயை அள்ளும் என்று சின்ன பழுவேட்டரையர் பார்த்திபன் திருவாய் மலர்ந்தாரோ தெரியவில்லை, பொன்னியின் செல்வன் படத்தின் இரு பாகங்களுக்குமான முதலீட்டு பணத்தையும், அதில் கிடைத்த வருவாயையும் சட்ட விரோத பணபரிவர்த்தனையில் ஈடுபட்டு மறைத்ததாக கூறி லைக்கா நிறுவனத்தின் சென்னை தியாகராய நகர் அலுவலகம் உள்ளிட்ட 8 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

பிரமாண்ட திரைப்படங்கள் தயாரிப்பதற்கு லைகா நிறுவனம் வெளி நாடுகளில் இருந்து கோடிக்கணகான ரூபாய் பணத்தை சட்ட விரோதமாக கொண்டு வந்து திரைப்பட தொழிலில் முதலீடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்தும் விசாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சுபாஸ்கரன் அல்லிராஜாவின் லைகா மொபைல் நிறுவனத்தின் துணை நிறுவனமான லைகா பட தயாரிப்பு நிறுவனம் இதுவரை கத்தி, 2.ஒ, காப்பான், தர்பார், பொன்னியின் செல்வன் இரு பாகங்கள் என 18 படங்களை தயாரித்து உள்ளது. அடுத்து கமல்ஹாசனின் இந்தியன்-2 , அஜீத்தின் விடாமுயற்சி, ரஜினி கவுரவ வேடத்தில் நடிக்கும் லால் சலாம் போன்ற படங்களை தயாரித்து வருகிறது. மேற்கண்ட படங்களுக்கான நிதி பரிமாற்றத்தில் முறையான கணக்குகளை பராமரிக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.

இது தொடர்பான முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறையினர் கைப்பற்றியுள்ளதாக கூறப்படும் நிலையில், லைகாவுக்கு நிதி அளிக்கும் வெளி நாட்டு செல்வந்தர்கள் யார்? அவர்களது பணம் யார் மூலமாக, என்ன வடிவில் இங்கு கொண்டு வரப்படுகின்றது ? பொன்னியின் செல்வன் படத்தில் லைகாவுக்கு கிடைத்த லாபத்தொகை எவ்வளவு ? என்பன போன்ற விரிவான தகவல்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டுப் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகின்றது.

கடந்த 2 நாட்களாக நடைப்பெற்ற சோதனை நிறைவுபெற்றதாக அறிவித்துள்ள அதிகாரிகள் ஏராளமான ஆவணங்களை கைப்பற்றி சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. அதே போல உதயநிதி ரசிகர் மன்ற செயலாளர் பாபுவின் அலுவலகத்துக்கு சென்ற அமலாக்கத்துறையினர், உதயநிதி ரசிகர் மன்ற அறக்கட்டளையின் கணக்கு விவரங்களை தாக்கல் செய்யவும், விசாரணைக்கு ஆஜராகுமாறும் கூறிச் சென்றதை அடுத்து, பாபு விசாரணைக்கு ஆஜரானார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments