யூடியூப்பர்கள் எச்சரித்தும் கேட்கலன்னா இது தான்... நாகலாபுரம் நீர்வீழ்ச்சியில் சம்பவம்... மூழ்கி பலியான 3 மாணவர்கள்..!

0 5155

சென்னையில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில், ஆந்திர வனப்பகுதியில் அமைந்துள்ள நாகலாபுரம் அருவியில் குளிக்கச்சென்ற சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த விபரீதம் அரங்கேறி உள்ளது

சென்னையில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் நாகலாபுரம் பூபதேஸ்வர கோணா வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த அருவியில் தான் விபரீத உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன

டிரெக்கிங் பிரியர்களுக்கு விருப்பமான இடமாக இருந்து வருகிறது இந்த அருவி. இதற்கு செல்வோர், கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு 3 கிலோ மீட்டர் தூரம் காட்டுக்குள் நடந்து சென்றால்தான் வனத்தின் மத்தியில் அமைந்துள்ள நாகலாபுரம் அருவியை அடைய முடியும்.

இங்கு நண்பர்களுடன் செல்லும் இளைஞர்கள் அருவியின் தடாகத்தில் குதித்து விளையாடுவது வழக்கம்

ஏற்கனவே பலர் இந்த நீர்வீழ்ச்சியின் தடாகத்தில் மூழ்கி உயிரிழந்திருப்பதால் , எச்சரிக்கையுடன் குளிக்க வேண்டும், நீச்சல் தெரியாதவர்கள் தடாகத்திற்குள் இறங்க வேண்டாம், நீச்சல் தெரிந்தாலும் வேகமான நீரோட்டம் உள்ள நேரங்களில் அருவியை நோக்கிச்செல்ல வேண்டாம் என்பது உள்ளிட்ட எச்சரிக்கைகளை இந்த அருவி குறித்து வீடியோ வெளியிடும் யூடியூப்பர்கள் தவறாமல் சொல்வது வழக்கம்.

இந்த நிலையில் சென்னையில் இருந்து இந்த அருவிக்கு குளிக்கச்சென்ற ஐந்து இளைஞர்கள் , எச்சரிக்கையை மீறி மகிழ்ச்சியுடன் செல்பி வீடியோ எடுத்தும் சிறிய பாறை மீது இருந்து நீரில் குதித்தும் குளித்து கொண்டிருந்தனர்.

அப்போது தண்ணீரில் குதித்த மூன்று பேர் நீண்ட நேரமாகியும் மேலே வராததால் நண்பர்கள் இருவரும் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தண்ணீரில் மூழ்கிய மாதவன், நவீன், கார்த்திக் பிரசாத் ஆகியோரை தேடும் பணியில் போலீசார், மீட்பு குழுவினர் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.

தகவலறிந்த நாகலாபுரம் போலீசார், தீயணைப்பு மற்றும் நீச்சல் வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளைஞர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சத்திவேடு இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த அருவியில் தற்காலிகமாக மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோடையை கொண்டாட நீர்வீழ்ச்சிகளை நாடிச்செல்வோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்தச் சம்பவம் மேலும் ஒரு எச்சரிக்கை..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments