தங்கம், வெள்ளிக்கட்டி தருவதாக ரூ.15 லட்சம் பணத்துடன் ஓடியவர் வீதியில் உயிருக்கு போராடிய சோகம்..! மக்கள் மத்தியில் ஒரு கொலை

0 2910

சேலம் மூன்றுரோடு பகுதியில் மக்கள் மத்தியில் இளைஞர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறைந்த விலைக்கு தங்கம் மற்றும் வெள்ளிக்கட்டிகள் வாங்கித் தருவதாக கூறி 15 லட்சம் ரூபாயுடன் கம்பி நீட்டியவர் வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிய சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த வெள்ளிப்பட்டறை ஊழியர் உதயசங்கர் என்பவர் தான் மக்கள் மத்தியில் கொடூரமாக வெட்டப்பட்டு உயிருக்கு போராடியவர்

சேலம் மூன்று ரோடு பகுதியில் உள்ள விவசாய விற்பனை கூட்டுறவு வங்கி அருகே உதயசங்கர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்றுபேர் உதய்சங்கரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து உதயசங்கர் இரு சக்கர வாகனத்தில் ஏறிச் செல்ல முயன்றார். அவர்கள் 3 பேரும் உதயசங்கரை பயங்கரமான ஆயுதங்களால் வெட்ட முயன்றதும், உதயசங்கர் இரு சக்கர வாகனத்தை அவர்கள் மீது தள்ளிவிட்டு தப்பி ஓடினார். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் கொலைவெறியுடன் விரட்டிச்சென்ற அந்த 3 பேரும் சேர்ந்து உதய்சங்கரை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகின்றது. இதில் அவரது தலை,வயிறு,கை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டு விழுந்தது, பின்னர் கொலைவெறிக் கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு வர தாமதமான நிலையில் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த உதய்சங்கரை அப்பகுதி மக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்தார்.

தகவலறிந்து மாநகரத் துணை ஆணையாளர் கௌதம் கோயல் தலைமையான காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர். இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக பள்ளப்பட்டி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உதயசங்கர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஓமலூர் பகுதியில் குறைந்த விலைக்கு தங்கம் மற்றும் வெள்ளிக்கட்டி வாங்கித்தருவதாக கூறி சிலரிடம் சுமார் 15 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாகவும், அந்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட உதயசங்கர் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் இந்த கொலை நடந்தது தெரியவந்துள்ளது.

மோசடி பணத்தை கேட்டதில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி இந்த கொலை சம்பவம் நடந்ததா ? அல்லது வேறு ஏதாவது காரணமா ? என்ற கோணத்தில் விசாரணையை முன்னெடுத்துள்ள போலீசார் , கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.

கொல்லப்பட்ட உதயசங்கர் மோசடி வழக்கில் சிக்கிய போது இந்திய ஜனநாயக கட்சியின் சேலம் மாநகர மாணவரணி துணைச் செயலாளராக இருந்ததாகவும், மோசடி வழக்கில் கைதாகி சிறைக்கு சென்று வந்த பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.கவில் தன்னை இணைத்துக் கொண்டதும் குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments