கள்ளச்சாராய வழக்குகள் சிபிசிஐடி-க்கு மாற்றப்படும்: முதலமைச்சர்
கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பான வழக்குகள் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்படுவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கள்ளச்சாராயம் அருந்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து முதலமைச்சர் ஆறுதல் தெரிவித்தார்.
இதையடுத்து, கள்ளச்சாராயத்தை தடுப்பது தொடர்பாக அமைச்சர்கள், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்கள் உடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். பின்னர் பேட்டியளித்த முதலமைச்சர், டாஸ்மாக் பாட்டில்களில் கள்ளச்சாராயத்தை ஊற்றி விற்றதால் துயர சம்பவங்கள் நிகழ்ந்ததாக கூறினார்.
கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெறுவோருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என முதலமைச்சர் வருவதற்கு முன் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பதிலளித்த முதலமைச்சர், கள்ளச்சாரயத்தால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக வழிமுறைகள் உள்ளதாகவும், பதற்றத்தில் உறவினர்கள் குற்றம்சாட்டுவதாகவும் விளக்கினார்.
விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு முதலமைச்சர் திரும்பிய வழியில், மதுராந்தகம் அருகே கள்ளச்சாராயம் குடித்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 6 பேரையும் சந்தித்து முதலமைச்சர் ஆறுதல் கூறினார். இதனிடையே இந்நிலையில், விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவையும், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு டி.எஸ்.பிக்களையும் பணியிடை நீக்கம் செய்யவும் செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் பிரதீப்பை பணியிட மாற்றம் செய்யவும் முதலமைச்சர் உத்தரவிட்டார்.
Comments