பனைமரத்தில் படுத்து உறங்கிய 50 வயது போதைக் குழந்தை கூண்டு கிரேன் மூலம் மீட்பு..! என்ன சரக்கா இருக்கும்..?
கோவையில் டாஸ்மாக் மது குடித்து விட்டு பனையில் ஏறிய 50 வயது மதுப்பிரியர் போதையில் மரத்திலேயே படுத்து உறங்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது. போதைப்பிரியரை கிரேன் கொண்டு வந்து மீட்ட சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
பொள்ளாச்சி கோட்டூர் சாலை ஆவில் சின்னாம்பாளையம் பகுதியில் சாலையோரம் இருந்த 70 அடி உயரமுள்ள பனை மரத்தின் உச்சியில் ஒருவர் பனைமர மட்டைகளுக்கு நடுவே படுத்துக் கொண்டிருந்ததை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து மரத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் கூச்சலிட்டு சத்தம் போட்டும் அந்த நபர் அசைந்து கொடுக்கவில்லை. மற்றொரு நபர் மேலே ஏறிச்சென்று பார்த்த போது அந்த நபர் போதையில் மரத்தில் இருந்து இறங்க இயலாமல் படுத்திருப்பது தெரியவந்தது. பின்னர் தீயணைப்புத் துறைவிற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், அவரை கயிறு கட்டி பனையில் இருந்து இறக்க முயற்சித்தனர். கீழே அவர் விழுந்து விடாமல் இருக்க அடியில் வலை விரித்தும் காத்திருந்தனர். இந்த மீட்பு முயற்சி பலனளிக்கவில்லை.
பின்னர் இரும்புக்குண்டு பொருத்தப்பட்ட ராட்சச கிரேன் கொண்டுவரபட்டு மேலே சென்ற தீயணைப்பு வீரர்கள் , பனை மரத்தின் மட்டைகளுக்கிடையே உறங்கிக் கொண்டிருந்த அந்த நபரை லாவகமாக தூக்கி இரும்பு குண்டில் வைத்து கீழே கொண்டு வந்தனர்.
மூன்று மணி நேரத்துக்கு மேல் போராடி தீயணைப்பு வீரர்கள் அந்த 50 வயது போதைக்குழந்தையை கீழே இறக்கியவுடன் அங்கிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஆரவாரத்துடன் கைகளை தட்டி நன்றி தெரிவித்தனர் . விசாரணையில் அவர் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை செம்மனாம்தியைச் சேர்ந்த பனைத் தொழிலாளியான லட்சுமணன் என்பதும் டாஸ்மாக்கில் மது அருந்திவிட்டு நுங்கு வெட்டுவதற்காக மரத்தில் ஏறியுள்ளார். மரத்தின் உச்சிக்கு சென்ற அவர், அங்கு வைத்தும் மது அருந்தியதால் போதை தலைக்கு ஏறி மரத்தின் மீதே உறங்கியதாக தெரிவித்தார். பின்னர் போலீசார் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
Comments