விவாகரத்து தர மறுப்பு... மனைவி கழுத்தை அறுத்த போலீஸ்காரர்.... ஒப்பாரிக்கூடமான காவல் நிலையம்..!

0 3363

விவாகரத்து தர மறுத்த மனைவியை ஓட ஓட விரட்டி கழுத்தை அறுத்துக் கொலை செய்ததோடு, தடுக்க வந்த மகனையும் கத்தியால் குத்திவிட்டு தலைமறைவான போலீஸ் காரரை காவல்துறை தேடிவருகின்றனர்

மனைவியை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய போலீஸ்காரரை கைதுசெய்து தங்களிடம் ஒப்படைக்க கோரி அவர் பணிபுரிந்த காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பெண் வீட்டாரின் கண்ணீர் கதறல்கள் தான் இவை..!

தெலுங்கானா மாநிலம் சூரியாபேட்டை மாவட்டம் நரசிங்கலகூடம் கிராமத்தை சேர்ந்த காவலர் ராஜ்குமாருக்கு, ஷோபா என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ள நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு சோபா தாய் வீட்டிற்கு சென்று வசித்து வந்தார்.

15 வயது சிறுவர்களான இரு மகன்களின் நலன் கருதி , போலீஸ் அதிகாரிகள் தலையிட்டு காவலர் ராஜ்குமாருடன் ஷோபாவை பேசவைத்து இரண்டு பேரையும் சேர்த்து வைத்தனர். இந்த நிலையில் வனஸ்தலிபுரத்திற்கு பணியிட மாறுதல் பெற்று வந்த ராஜ்குமார் அங்கு நீதிமன்றத்தில் காவலராக பணியாற்றி வந்தார்.

வெள்ளிக்கிழமை அன்று காலை பணி முடிந்து விடு திரும்பிய காவலர் ராஜ்குமார் மனைவியிடம் நாம் இருவரும் பிரிந்து விடலாம் என்று கேட்டதாகவும், அதற்கு மனைவி சோபா ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் ஆவேசமடைந்த ராஜ்குமார் மனைவி ஷோபாவை தலைமுடியை பிடித்து கடுமையாக தாக்கியிருக்கிறார்.
உயிர் தப்புவதற்காக வீட்டின் மாடியில் இருந்து கீழே ஓடிய சோபாவை விரட்டி வந்த ராஜ்குமார் அவரை மடக்கிப் பிடித்து கீழே தள்ளி தலை மீது காலை வைத்து கழுத்தை கத்தியால் அறுத்ததாக கூறப்படுகின்றது.

அத்தோடு விடாமல் சோபாவை இரண்டாவது மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டதுடன், இதனை தடுக்கச்சென்ற அவருடைய மூத்த மகனையும் கத்தியால் தாக்கி உள்ளார் ராஜ்குமார்.
அவரது மகன் உயிர் தப்பி ஓடிச்சென்று காவல் நிலையத்தில் இது பற்றி புகார் அளித்தார்.

போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது சோபா இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். போலீஸ் காரர் ராஜ்குமார் தலைமறைவானது தெரியவந்தது. சோபா உடலை கைப்பற்றிய போலீசார், தப்பி ஓடிய ராஜ்குமாரை பிடிப்பதற்காக போலீசார் ஐந்து தனிப்படைகளை அமைத்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதற்கிடையே தங்கள் வீட்டுப்பெண்ணை கொலை செய்த ராஜ்குமாரை பிடித்தால் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சோபாவின் குடும்பத்தினர் போலீசாரிடம் வற்புறுத்தி காவல் நிலையம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது

ராஜ்குமாருக்கு வேறொரு பெண்ணுடன் தவறான தொடர்பு இருக்கிறது என்றும் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காகவே ராஜ்குமார் தங்கள் மகளை அடிக்கடி அடித்து துன்புறுத்தி விவாகரத்து கேட்டு வந்தார் என்று குற்றஞ்சாட்டிய பெற்றோர், விவாகரத்து கொடுக்க மறுத்த காரணத்தால் தங்கள் மகளை கொலை செய்துவிட்டார் என்றும் புகாரில் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments