‘கோமு’ விட்டுருச்சி ‘கொம்பனா’ இருந்தால் மீசையை நாசம் பண்ணிருக்கும்..! இப்ப ரூ 10 ஆயிரம் போச்சு..!

0 5757

தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே காட்டு யானையிடம் கையை தூக்கி அட்ராசிட்டி செய்த மீசை முருகேசனை கைது செய்த வனத்துறை அதிகாரிகள் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். ஒற்றையானையிடம் அவர் கெத்துக் காட்டிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

காட்டுக்குள் நிற்கும் ஒற்றை யானையிடம் கையை உயர்த்திக் கொண்டு வித்தை காட்டும் இவர் தான் மீசை முருகேசன்..!

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் - பென்னாகரம் வனப்பகுதிக்குள் இருந்து வெளியே வந்த ஒற்றை யானை ஒன்று சாலையோரம் நிற்க... போதை பயம் அறியாது என்பது போல பென்னாகரத்தை சேர்ந்த திமுக பிரமுகர் மீசை முருகேசன் அதன் அருகில் சென்று கையெடுத்து கும்பிட்டதோடு, கையை தூக்கி சுற்றுலா பயணிகளிடம் கெத்துக் காட்டினார்.

மீசை முருகேசன் இந்தப்பக்கம் திரும்பியதும் அவரை பயமுறுத்துவது போல காலால் மண்ணை தட்டி ... ஒழுங்கா இங்க இருந்து ஓடி போயிரு... என்று எச்சரித்தது போல நின்றது அந்த யானை..!

அதிர்ஷ்டவசமாக யானையின் தாக்குதலில் இருந்து மீசை தப்பினாலும், இந்த சம்பவத்தை பார்த்து ஆர்வ மிகுதியால் ஏதாவது சுற்றுலாபயணி இப்படி செய்தால் யானையின் தாக்குதலுக்குள்ளாக நேரும் என்பதால் மீசை முருகேசனை கைது செய்த வனத்துறையினர் அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் கூறும் போது, மொத்தம் 4 யானைகள் தனி தனியாக இந்த சாலையை கடந்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளது என்றும் அதில் மீசை வித்தை காட்டியது கோமு என்ற 22 வயது ஆண் யானை என்றும் குறிப்பிட்டனர்.

கோமு யானை சாலையோரம் நிற்கும் காலால் மண்ணை தட்டி எச்சரிக்கும், யாரையும் விரட்டவோ தாக்கவோ செய்யாது என்பதை உள்ளூர் காரரான மீசை முருகேசன் தெரிந்து வைத்துள்ளார்.

அதே போல யானையின் அருகில் சென்று இரு கைகளையும் உயர்த்தினால் யானை எளிதில் தாக்குதல் நடத்தாது என்ற நம்பிக்கையில் இந்த சேட்டைகளை அவர் செய்துள்ளார் என்று சுட்டிக்காட்டுகின்றனர் வனத்துறையினர், இதே பகுதியில் கொம்பன் என்ற 25 வயது யானை ஒன்றும் சாலையை கடப்பதை வாடிக்கையாக வைத்துள்ளது.

இந்த கொம்பன் சாலையோரம் உள்ள வனத்துறையின் போர்டுகளையும், மைல் கற்களையும் பிடுங்கி எரிந்து விட்டு சாவகாசமாக சாலையை கடந்து செல்லும் என்கின்றனர்.

கோமுவிடம் காட்டிய வித்தையை கொம்பனிடம் காட்டி இருந்தால் மீசையை அந்த யானை நாசம் செய்திருக்கும் என்ற வனத்துறையினர். அண்மையில் வாகன ஓட்டிகளை கொம்பன் தெரிக்க விட்ட சம்பவத்தை நினைவு கூர்ந்தனர்.

எனவே யானைகள் நின்றால், ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் செல்போனில் படம் எடுப்பதை தவிர்த்து எச்சரிக்கையுடன் சாலையில் பயணிக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments