6 மாசமா இழுத்த போலீஸ்.. அரை மணி நேரத்தில் ஆக்சன் எடுத்த அமைச்சர்..! சரவணனுக்கு எதிராக திரும்பிய மனைவி

0 4158

சென்னை மவுலிவாக்கத்தில் தனக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக நடிகர் சரவணன் , அமைச்சர் தாமோ அன்பரசனை சந்தித்து புகார் அளித்த நிலையில், ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடையில் இருந்த பொருட்கள் போலீஸ் பாதுகாப்புடன் அப்புறப்படுத்தப்பட்டன.

நடிகர் சரவணன் தனது ஆதரவாளர்களுடன் அமைச்சர் தாமோஅன்பரசனை சந்தித்து சென்னை மவுலிவாக்கத்தில் தனது கார்பார்க்கிங் இடத்தையும் ஓடிஎஸ் இடத்தையும் ஆக்கிரமித்து புரோக்கர் ராமமூர்த்தி என்பவர் கடைகள் கட்டி இருப்பதாக புகார் அளித்தார். 6 மாதங்களாக போலீசார் நடவடிக்கை எடுக்க வில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அமைச்சரின் உத்தரவின் பேரில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த இரு கடைகளையும் போலீஸ் பாதுகாப்புடன் திறந்து உள்ளே இருந்த பொருட்களை சரவணனின் ஆதரவாளர்கள் அப்புறப்படுத்தினர்.

இதனை கண்டித்து புரோக்கர் ராமமூர்த்தியும் அவரது மனைவி ஜெபமணியும் சரவணனையும் அவரது ஆதரவாளர்களையும் கடுமையாக திட்டினர்.

நடிகர் சரவணனை போலீஸ் முன்னிலையில் பிச்சைக்காரன் என்று சொல்லி மிரட்டினார் ராமமூர்த்தி. தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் அந்த இரு கடைகளும் நடிகர் சரவணனுக்கு சொந்தமானது என்று நோட்டீசை ஒட்டிச்சென்றனர்

இதையடுத்து புரோக்கர் ராமமூர்த்தி அவரது மனைவி ஜெபமணி ஆகியோர் சரவணனின் முதல் மனைவி சூர்யாஸ்ரீயை துணைக்கு அழைத்துக் கொண்டு , முதல் அமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்தனர்.

ஜெபமணி பெயரில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக சூர்யாஸ்ரீ செய்தியாளர்களிடம் பேசினார். சரவணன் தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் , தற்போது தன்னிடம் விவாகரத்து பெறாமல் வேறு ஒரு பெண்ணை சேர்த்து வைத்துக் கொண்டு 2வது திருமணம் செய்து கொண்டதாக கூறி வருவதாகவும் தெரிவித்தார்.

பருத்தி வீரன் படத்துக்கு முன்பு சரவணன் பிச்சை எடுக்கும் நிலையில் இருந்ததாகவும், அப்போது சுங்கத்துறையில் வேலை பார்த்து வந்த தான் அவரை காப்பாற்றியதாகவும், தற்போது பிக்பாஸில் கிடைத்த பணத்தை வைத்து சரவணன் இப்படிப்பட்ட காரியங்களை செய்வதாகவும் கூறினார்

புகார் அளித்த ஜெபமணி கடைசி வரை செய்தியாளர்களிடம் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments