இம்ரான்கானுக்கு ஜாமீன்.. 15 நிமிடம் கெடு கொடுத்து விடுதலை..!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்கியது .
மே 9ம் தேதிக்குப்பின்னர் பதிவான எந்த ஒரு வழக்கிலும் மே 17 வரை அவரைக் கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. ஜாமீனில் இம்ரான் கான் விடுவிக்கப்பட்ட போதும் காவல்துறையினர் அவரை வெளியே விட அனுமதிக்கவில்லை. நீதிமன்ற வளாகம் அருகே கடும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
பாதுகாப்பு காரணங்களால் இம்ரான் கான் நீதிமன்றத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டு சுமார் 7 மணி நேரம் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் பொறுமை இழந்த இம்ரான் கான் காவல்துறையின் ஐஜிக்கு 15 நிமிட கெடு விதித்தார்.தம்மை உடனடியாக விடுவிக்காவிட்டால் தாம் கடத்தப்பட்டதாக அறிவிக்கப் போவதாக எச்சரித்தார். இதையடுத்து இம்ரான் கான் நள்ளிரவு 11 மணியளவில் விடுதலை செய்யப்பட்டார்.
இஸ்லாமாபாதில் இருந்து பலத்த பாதுகாப்புக்கு இடையே அவர் கார் மூலமாக லாகூர் சென்றார். காரில் இருந்தபடியே வீடியோ பதிவை வெளியிட்ட இம்ரான்கான் தம்மை இஸ்லாமாபாத்தை விட்டு வெளியேற விடாமல் தடுக்க நடைபெற்ற முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாகக் கூறினார்.
Comments