ஊசி போடச்சொன்ன அரசு பெண் மருத்துவரை செருப்பால் அடித்த இளைஞர்..! விரட்டி விரட்டி தாக்கியதால் பரபரப்பு..!

0 3558

அரியலூர் மாவட்டம் குமிழியம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் பெண் மருத்துவரை விரட்டி விரட்டி செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

சிகிச்சைக்கு சென்ற இடத்தில் ஊசி போட்டுக் கொள்ளச்சொன்ன பெண் மருத்துவரையும், செவியர்களையும் அடிக்க ஓடி அட்டகாசம் செய்த லோக்கல் சுரேஷ் இவர் தான்..!

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குமிழியத்தில் மேம்படுத்தப்பட்ட வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு அரியலூரைச் சேர்ந்த பெண் மருத்துவர் சத்யா பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று குமிழியம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது சகோதரியின் மகனை சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். அந்த சிறுவனை பரிசோதித்த மருத்துவர், ஊசி போட்டுக் கொள்ள பரிந்துரைத்த நிலையில் சிறுவன் ஊசி போடவிடாமல் செவிலியரை தடுத்து கூச்சலிட்டுள்ளான்.

இதையடுத்து சிறுவனை சமாளிக்க இயலாமல் திணறிய சுரேஷ், அங்கு நின்ற மருத்துவர் சத்யாவின் கணவர் சிலம்பரசன் என்பவரை ஒரு கை பிடிக்க கூறியுள்ளார். சிலம்பரசன் கையில் குழந்தை இருந்ததால் அவர் பிடிக்க இயலாது என்று மறுத்ததாக கூறப்படுகின்றது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் ஹேல்ப் கேட்டா பன்ன மாட்ர... நீ யார், எந்த ஊர் என திட்டி விரட்டி உள்ளார்.

தனது கணவரை தகாத வார்த்தைகளால் திட்டுவதை கண்டு ஆத்திரம் அடைந்த சத்யா பதிலுக்கு திட்டியதால் வாக்குவாதம் முற்றி மருத்துவரையும், வீடியோ எடுத்துக் கொண்டிருந்த அவரது கணவரையும் விரட்டிச்சென்று செருப்பால் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது

தொடர்ந்து மருத்துவர் உடன் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு மீண்டும் அடிக்க ஓடியதால் அங்கிருந்தவர்கள் சுரேஷை சமாதானப்படுத்தினர்.

அடங்க மறுத்து அட்டகாசம் செய்த சுரேஷை, சிலர் அங்கிருந்து வெளியேறச்சொல்லியும் கேட்காத அவர் தான் ஒரு மெடிக்கல் ஸ்டூடண்ட் என்று கூறி அலப்பறை செய்தார்

போலீசுக்கு தகவல் கொடுத்து நீண்ட நேரம் காத்திருந்தும் சம்பவ இடத்துக்கு போலீசார் ஒருவர் கூட வராததால் மருத்துவர் சத்யா, இரும்புலிகுறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் . இதையடுத்து தன்னை லோக்கல் பாய் என்று கையில் செருப்புடன் அட்டகாசம் செய்த சுரேஷை கைது செய்தனர். கேரளாவில் மருத்துவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இது போன்ற மோதல் தொடர்பாக புகார் அளித்தால் விரைவாக சம்பவ இடத்துக்கு போலீசார் வர வேண்டும் என்பதே மருத்துவ பணியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments