வண்டியோடு வாங்க.. வாண்டடா வழக்கில் சிக்கி பொடி நடையா போங்க ..! மனைவியிடம் அடிவாங்கியவரின் பரிதாபம்..!

0 2986

கோவையில் குடி போதையில் வீட்டுக்கு லேட்டாக வந்த கணவனை மனைவி ரெண்டு தட்டு தட்டி கண்டித்த நிலையில், காயத்துடன் போலீசில் புகாரளிக்கச் சென்ற கணவன், காவல் நிலைய வளாகத்துக்குள் காரை வேகமாக ஓட்டிச் சென்று வழக்கில் சிக்கி காரை பறிகொடுத்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.

அரை டவுசரோடு டேபிள் மீது கையூன்றி சாய்ந்துகொண்டு காவல் ஆய்வாளரின் நேம் பேட்சை குறு குறுவென உற்றுப்பார்க்கும் இவர் தான், மனைவி மீது புகார் அளிக்கச்சென்று வாண்டடாக போதை வழக்கில் சிக்கிக் கொண்ட பழனிச்சாமி மகன் பன்னீர்செலவம்...!

சூலூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மாதையன் உள்ளிட்ட போலீசார் வியாழக்கிழமை இரவு பணியில் இருந்த போது சூலூர் காவல் நிலைய வளாகத்திற்குள் அதிவேகமாக கார் ஒன்று வந்து நின்றது. இந்த வாகனத்திலிருந்த போதை ஆசாமி ஒருவர் தள்ளாடியபடியே இறங்கி வந்தார்.

உங்களால் நிற்கவே முடியவில்லையே... எதற்காக வாகனத்தை இவ்வளவு வேகமாக ஓட்டி வந்தீர்கள் ? என காவல் ஆய்வாளர் மாதையன் போதை ஆசாமியிடம் கேட்டார். அங்குள்ள இருக்கையில் அமருமாறு கூறியதற்கு நான் ஒரு பிரபல அமைச்சரின் உறவினர் என கூறி செல்போனில் யாரிடமோ பேசிய அவர், கீழே விழுந்து விடாமல் இருக்க மேஜை மீது கையூன்றி தவழ்ந்தவாறு காவல் ஆய்வாளரின் பெயரை அருகில் சென்று குறு குறுவென உற்றுப்பார்த்தார்.

அப்படி என்ன தெரிகிறது ? என்று கேட்டதற்கு கூறியதையே திரும்பத் திரும்ப கூறினார் அந்த போதை ஆசாமி . விசாரணையில் அவர் சூலூர் ராஜூ லே அவிட் பகுதியை சேர்ந்த கே.பி. பன்னீர் செல்வம் என்பதும் போதையில் வீட்டுக்கு தாமதமாக சென்றதால் மனைவியிடம் மாத்து வாங்கிக் கொண்டு காவல் நிலையத்தை நாடி வந்திருப்பதும் தெரியவந்தது

தள்ளாடிக்கொண்டும் .. உளரிக் கொண்டும் சுற்றிய பன்னீர் செல்வத்தை மடக்கிப்பிடித்து போதை கண்டறியும் பிரீத் அனலைசரில் ஊதச்சொன்னதும், தரமாக சிக்கிக் கொண்டதை உணர்ந்த அவர் என்னங்கண்ணா என்னைய போய் ஊதச்சொல்லிக்கிட்டு... என்று கொங்கு தமிழில் பேசி போலீசுக்கே நுங்கு கொடுக்கப் பார்த்தார்

ஊத முடியாது என அடம்பிடித்த பன்னீரிடம் பக்குவமாக பேசி ஊதவைத்த போலீசார், அவர் குடி போதையில் வாகனம் ஓட்டியதை உறுதி செய்து, போதையில் வாகனத்தை ஒட்டியதாக வழக்கு பதிவு செய்ததோடு, அண்ணார் அதிவேகத்தில் அவர் ஓட்டி வந்த காரையும் பறிமுதல் செய்தனர்.

பொண்டாட்டியுடன் சண்டை போட்டு விட்டு புகார் அளிக்க காரில் தவுளத்தாக வந்திறங்கிய பன்னீரின் காரை போலீசார் பறிமுதல் செய்ததால், பட்டதெல்லாம் போதும் பன்னீரு என்று தன்னை தானே தேற்றிக் கொண்டு பொடி நடையாக வீட்டுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார் பன்னீர் செல்வம்.

கெடைக்கு ரெண்டு ஆடு கேட்கும் நரி ஊருக்குள் வருவதே தப்பு... அதுவும் ஊளையிட்டுக் கொண்டே வந்து காவல்காரன் கையில் சிக்கினால் என்ன நடக்கும் என்பதற்கு தண்ணீரில் வந்த பன்னீரின் பரிதாப நிலையே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments