டேங்கர் லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து - நடத்துனர் உள்ளிட்ட 4 பேர் உயிரிழப்பு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே, டேங்கர் லாரி மற்றும் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் நடத்துனர் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர்.
திருத்துறைப் பூண்டியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு சொகுசுப் பேருந்து, சீர்காழி புறவழிச்சாலையில் பாதரகுடி அருகே எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. அதனைத் தொடர்ந்து, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் நின்றிருந்த டேங்கர் லாரி மீதும் மோதியது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர், பேருந்தின் நடத்துநர் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் பயணம் செய்த 26 பயணிகள் காயமடைந்தனர். விபத்தில் சிக்கிய டேங்கர் லாரியிலிருந்து குரூடு ஆயில் கசிந்து வருவதால் பாதுகாப்பு கருதி அங்கு இரு தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, மாற்றுச் சாலை வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
விழுப்புரம் - நாகப்பட்டினம் 4 வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருவதால் சாலைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தினாலும், போதிய மின்விளக்குகள், அறிவிப்பு பலகைகள் இல்லாததாலும் விபத்து அடிக்கடி நிகழ்வதாக வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
Comments