உயிரிழந்த அம்மாவுடன் பேச வைக்கிறேன் பிரண்ட்... ஓம்.. ரீம்.. காளி... ரூ.6 கோடி காலி..! மென்பொறியாளரை ஏமாற்றிய ஆடிட்டர்
இறந்து போன தாயுடன் பேச வைப்பதாக கூறி சென்னையை சேர்ந்த மென்பொறியாளரிடம் 6 கோடி ரூபாயை அபேஸ் செய்த மந்திரவாதியை ஒர் ஆண்டு தேடுதல் வேட்டைக்கு பின்னர் போலீசார் கைது செய்துள்ளனர்.
பார்ப்பதற்கு பரிதாப நபராக காட்சியளிக்கும் இவர் தான் ஆன்மாவுடன் பேசுவதாகவும், மாந்திரீகம் செய்வதாகவும் கூறி நண்பரை ஏமாற்றிய ஆடிட்டரான போலி மந்திரவாதி சுப்ரமணி.
சென்னை, ஆண்டர்சன் சாலையைச் சேர்ந்தவர் மென்பொருள் பொறியாளர் கௌதம்சிவசாமி. கடந்த 2005ம் ஆண்டு நைஜீரியா நாட்டில் வேலைக்குச் சென்ற போது உடன் வேலை பார்த்த கேரளாவைச் சேர்ந்த சுப்ரமணியுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் குடும்ப நண்பர்கள் என்ற நிலைக்குச் சென்ற நிலையில், 2010ம் ஆண்டில் கவுதம் துபாய்க்கு சென்று விட, சுப்ரமணி கேரளாவிற்கு சென்றுள்ளார்.
எனினும், கவுதம் சென்னைக்கு வரும்போதெல்லாம் இருவரும் சந்தித்துக் கொண்டனர். கவுதமின் பக்தியை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த சுப்ரமணி, அவரை அடிக்கடி கோயில்களுக்கு அழைத்துச் சென்றதோடு, புட்டபர்த்தி சாய்பாபா தன்னிடம் நேரடியாக பேசுவதாகவும் கதை அளந்து விட்டார்.
இதனை உண்மையென கவுதம் நம்பவே, கேரளாவிலுள்ள வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார் சுப்ரமணி. அங்கு, சில பூஜைகளை செய்த சுப்ரமணி, சுவாமி படத்திலிருந்து விபூதியை விழச்செய்வது, எலுமிச்சை பழத்தை வரவழைப்பதென சித்து வேலைகளை செய்து காட்டவே அசந்துப்போன கவுதம், சுப்ரமணியை முழுமையாக நம்பத் துவங்கினார்.
இதன்பின்னர், இறந்து போன கவுதமின் அம்மா ஆன்மா தன்னிடம் பேசுவதாகவும், சில விஷயங்களை அவரது சார்பாக செய்ய வேண்டுமெனக் கூறி 2015ம் ஆண்டு முதல் சிறுகசிறுக வங்கி பரிவர்த்தனையாக 2 கோடியும், ரொக்கமாக சுமார் 4 கோடி ரூபாய் வரையிலும் ஆட்டையை போட்டுள்ளார் சுப்ரமணி.
தன் அம்மா பேசுவது தனக்கு ஏன் கேட்கவில்லை? என கவுதம் கேட்டபோது நீ சில பாவங்களை செய்துள்ளாய் அதனால் ஆன்மா பேசுவதை கேட்க முடியாதென கூறியதோடு, பரிகாரமாக அறக்கட்டளை ஆரம்பிக்க வேண்டும், தற்போது வசித்து வரும் பங்களாவை தனது பெயருக்கு எழுதித் தர வேண்டுமெனவும் சுப்ரமணி கூறியுள்ளார்.
மந்திரவாதி பேச்சைக் கேட்டு தனது குடும்பத்தினரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் கவுதமின் 3 வயது மகள் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார், குடும்பத்தில் அடுத்தடுத்து துர் மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், தனிமையில் கவுதம் யோசிக்கத் துவங்கிய போது, தான் சுப்ரமணியால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருவதை உணர்ந்தார். எனவே, தான் கொடுத்த பணத்தை திரும்பத் தருமாறு கேட்ட போது சுப்ரமணி மாந்திரீகம் செய்து முடக்கி வைத்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, கவுதம் கடந்தாண்டு மே மாதத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இதனை தெரிந்துக் கொண்ட சுப்ரமணி தலைமறைவாகவே அவரை ஒரு வருடமாக தேடி வந்த நிலையில் தனிப்படையினர் திருவனந்தபுரத்தில் வைத்து கைது செய்தனர்.
விசாரணையில், கவுதமிடமிருந்து ஏமாற்றி வாங்கிய பணத்தைக் கொண்டு கேரளாவில் ஆடிட்டர் தொழிலில் ஈடுபட்டு வருவதும், தன் மனைவிக்கு தங்கம் வைர நகைகளை வாங்கிக் கொடுத்துள்ளதோடு, மகளை வெளிநாட்டில் படிக்க வைத்திருப்பதும் தெரிய வந்தது.
கவுதமின் மகள் இறப்புக்கு போலி மந்திரவாதி சுப்ரமணி காரணமா? என்ற கோணத்திலும் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவல் தொழில் நுட்பம் வளர்ந்த இந்த காலத்தில் போலி வித்தைகளுக்கு கணினி மென்பொறியாளரே அடிமையாகி குடும்பத்தோடு, பணத்தையும் இழந்து நிற்கிறார்
Comments