கண்ணீர் குடும்பத்துக்கு கண்ணியமான தீர்வு சொன்ன கோட்டாட்சியர் புகாரி..! இப்படியும் ஒரு அரசு அதிகாரி..!
தூத்துக்குடி மாவட்டத்தில் கோயிலுக்கு வரி கொடுக்க மறுத்த குடும்பத்தினரை ஊரை விட்டு தள்ளி வைத்த சம்பவம் தொடர்பாக விசாரித்த திருச்செந்தூர் கோட்டாட்சியர் புகாரி, தண்ணீர் கூட பிடிக்க அனுமதி இல்லை என்று கண்ணீர் விட்ட குடும்பத்தாரை, கைகொடுக்க செய்து ஊரோடு சேர்த்து வைத்த நிகழ்வு அரங்கேறி உள்ளது..
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கனகராஜ்- ஆனந்தி தம்பதியினர். சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் தற்காலிக தூய்மை பணியாளராக பணிபுரிந்து வரும் ஆனந்தியின் மூத்த மகன் திருமணிராஜா இளையமகன் பிரவீன்குமார் ஆகியோர் தான் ஊரை விட்டு தள்ளிவைக்கப்பட்டதாக புகார் அளித்தவர்கள்
பக்கத்து ஊரில் உள்ள உறவுக்கார பெண்ணை காதலித்து வந்த திருமணிராஜா, கடந்தாண்டு தனது ஊரில் உள்ள வீரசக்கம்மாள் கோயிலில் வைத்து திருமணம் நடத்த அனுமதி கேட்டுள்ளார். காதல் திருமணத்தை கோயிலில் வைத்து நடத்த முடியாதென ஊர் நாட்டாமைகள் தீர்ப்பு வழங்கியதால், புகழ்பெற்ற குலசை முத்தாரம்மன் கோயிலில் வைத்து திருமணிராஜா தனது காதலியை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஊர் நிர்வாகத்தினர் மீது அதிருப்தியில் இருந்த ஆனந்தி குடும்பத்தினர், இந்த ஆண்டு கோயில் கொடை விழாவிற்கு வரி கொடுக்க முடியாது என்று மறுத்து விட்டனர். இதனால், குடும்பத்தினரை ஊரை விட்டு தள்ளி வைத்த வில்லங்க நாட்டாமைகள் பொதுகுழாயில் தண்ணீர் பிடிக்கவும் அனுமதிக்கவில்லையென கூறப்படுகிறது.
இதுகுறித்து, ஆனந்தியின் இளைய மகன் பிரவீன்குமார், குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். இந்த மனு, திருச்செந்தூர் கோட்டாட்சியர் புகாரியிடம் விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பேரில், சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் கோட்டாட்சியர் புகாரி, டிஎஸ்பி அருள், மற்றும் காந்திநகர் ஊர் நாட்டமைகள், ஆனந்தி குடும்பத்தினர் பங்கேற்றனர்.
"ஒரே ஊரில் இருக்கும் ஒரே சமுதாய மக்கள் இப்படி இருக்கலாமா?" என்ற கேள்வியுடன் விசாரணையை கோட்டாட்சியர் துவங்க, இருதரப்பினரும் தங்களது தவறை ஒத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, கனகராஜ் குடும்பத்தினர் கோயிலுக்கான வரிப்பணத்தை கொடுத்தனர்.
சிங்கம் படத்தில் வருவது போல அதான் ஊர்க்காரர்கள் சமாதானம் ஆகி விட்டீங்களே ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக்கோங்க, கைகளை குலுக்கிக்கோங்க என்று நாட்டாமை போல கோட்டாட்சியர் சொல்ல அவர்களும் ஒருவரையொருவர் கை குலுக்கிக் கொண்டனர்.
புகாரளித்த பிரவீன்குமாரை அழைத்த கோட்டாட்சியர் புகாரி "இது போன்ற விவகாரங்களில் தலையிடாமல் நன்றாக படி தம்பி"..! "படிச்சு ஐஏஎஸ் ஆகி நாலு பேருக்கு நல்லது செய்" என அறிவுரை கூறினார்.
ஊர் நாட்டாமைகளின் புறக்கணிப்பால் கண்ணீருடன் வந்த ஆனந்தியின் குடும்பத்தினர் அரச நாட்டாமையின் அசத்தலான தீர்ப்பால் மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு சென்றனர்.
Comments