ஸ்விக்கி டெலிவரி பாய் வீட்டு டி.வி. ஸ்பீக்கரில் தட்டினால் கொட்டுனது அம்புட்டும் தங்கம்..!
ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் கணக்கு வழக்கில்லாமல் பீரோவில் வைத்திருந்த தங்க நகைகளை அள்ளிச்சென்ற நர்சையும் அவரது ஆண் நண்பரான ஸ்விக்கி டெலிவரி பாயையும் போலீசார் விழுப்புரம் லாட்ஜில் வைத்து கைது செய்தனர்..
சென்னை அசோக் நகர் 62- வது குறுக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் 85 வயதான ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் மதுரகவி . இவர் தனது மனைவி சுந்தரவள்ளி என்பவருடன் குடியிருப்பின் கீழ் தளத்திலும், இவரது மகன் மற்றும் மருமகள் ஆகியோர் மேல் தளத்திலும் வசித்து வருகின்றனர். மதுரகவியின் மருமகள் செங்கல்பட்டு மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதியாக உள்ளார்.
மதுரகவியின் மனைவி சுந்தரவள்ளிக்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த சில மாதங்களாக வீட்டிலேயே அவருக்கு மருத்துவம் பார்ப்பதற்காக அண்ணா நகரில் உள்ள அமுதா ஏஜென்சி மூலம் சுழற்சி முறையில் செவிலியர்களை பணியமர்த்தியுள்ளனர். கடந்த 6-ம் தேதி பீரோவை திறந்து பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த 185 சவரன் நகைகள் மற்றும் ரூபாய் 50 ஆயிரம் பணம் கொள்ளை போயிருப்பதாக குமரன் நகர் காவல் நிலையத்தில் மதுரகவி புகார் அளித்தார்.
புகாரின் பேரில் குமரன் நகர் காவல் ஆய்வாளர் மணிமாலா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் மதுரகவியின் மனைவி சுந்தர வள்ளியை கவனித்து வந்த செவிலியர்களில் தேவி என்பவர், திடீரென பணியிலிருந்து நின்றது தெரியவந்தது. இதனையடுத்து ஏஜென்சி மூலம் விசாரணை மேற்கொண்ட போது தேவியின் செல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. தேவி பொய்யான முகவரியை கொடுத்து பணிக்கு சேர்ந்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து தேவியின் செல்போனுக்கு ஒரே நாளில் 50க்கும் மேற்பட்ட முறை தொடர்பு கொண்ட ஸ்விக்கி டெலிவரி பாய் ஜெகன்நாதன் என்பவரின் செல்போன் நம்பரை வைத்து, விழுப்புரம் அருகே லாட்ஜ் ஒன்றில் தனியாக அறை எடுத்து தங்கி இருந்த தேவியையும், ஜெகன் நாதனையும் மடக்கிப்பிடித்த போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்
விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் எல்ராம்பட்டை சேர்ந்த செவிலியர் தேவி, ஜெகன்நாதன் ஆகிய இருவரும் சேர்ந்து திட்டமிட்டு ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் மதுரகவியின் வீட்டில் இருந்து தங்க நகைகளை அள்ளிச்சென்றது தெரியவந்தது. மதுரகவியின் மனைவியை கவனித்துக் கொள்வதற்காக பணிக்கு வந்த தேவி, பீரோவில் கணக்கு வழக்கில்லாமல் ஏராளமான நகைகள் மற்றும் பணம் இருப்பதாக ஜெகநாதனிடம் கூறி உள்ளார். இருவரும் சேர்ந்து திட்டமிட்டு கடந்த 5-ம் தேதி நகை மற்றும் பணத்தை திருடிவிட்டு போலீசாரிடம் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் என ஊர் ஊராக சுற்றியது தெரியவந்தது.
வாரம் ஒரு முறை சுழற்சி முறையில் செவிலியர்கள் மாறுவதால், தான் திருடினால் சந்தேகம் வராது என்ற எண்ணியதாகவும், எவ்வளவு நாள் தான் சாப்பாடு பார்சலை தூக்கிக் கொண்டு ஓடுவது..? தாங்களும் , சொகுசாக வாழ வேண்டும் என்பதால் திட்டமிட்டு நகைகளை திருடியதாக ஜெகன்னாதனும் தேவியும் தெரிவித்துள்ளனர்.
ஜெகநாதன் தங்கி இருந்த அடையார் வீட்டில் சோதனை நடத்திய போலீசார், டி.வி ஸ்பீக்கரை தட்டிய போது உள்ளிருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த நகைகள் கொட்டியதாகவும், 185 சவரன் திருடு போனதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் 207 சவரன் நகைகள் மற்றும் ரூபாய் 30 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர். செவிலியர் வேலைக்கு சென்று திருட்டு ராணியான தேவியையும், ஜெகஜால கில்லாடியான ஜெகன் நதனையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Comments