பாகிஸ்தான்: சிறை நிரப்பும் பிரதமர்கள்

0 1561

பாகிஸ்தானில் ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் உயர் பதவியை அலங்கரித்தவர்களில் பலர் சிறையில் அடைக்கப்பட்ட மோசமான வரலாற்றைக் காணலாம்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நேற்று இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டார். இவர் மட்டுமின்றி அந்நாட்டில் பிரதமராக இருந்த பலரும் சிறையில் அடைக்கப்பட்ட வரலாறு உண்டு.

1962ல் பாகிஸ்தானின் 5வது பிரதமராக இருந்த ஹுசைன் ஷஹீத் சுஹ்ரவர்தி என்பவர் ராணுவத் தளபதி அயூப்கானின் ராணுவ ஆட்சியை ஏற்க மறுத்ததால் பொய்யான குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவருக்கு பின் பிரதமராக வந்த சுல்பிகர் அலி பூட்டோ 1977ல் அரசியல் எதிரியைக் கொலை செய்ய சதி செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார். இறுதியில் மரணதண்டனை விதிக்கப்பட்டு 1979ல் தூக்கிலிடப்பட்டார்.

சுல்பிகர் அலி பூட்டோவுக்குப் பின் பொறுப்பிற்கு வந்த அவரது மகள் பெனாசிர் பூட்டோ பாகிஸ்தானில் இரண்டு முறை பிரதமராக இருந்தார். ஜியா வுல் ஹக்கின் சர்வாதிகாரத்தின் கீழ் 1985 சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் சொத்துக் குவிப்பு வழக்கில் 1999ம் ஆண்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

பெனாசிரைத் தொடர்ந்து பிரதமராக பொறுப்பேற்ற நவாஸ் ஷெரீப் ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் தனது மகள் மரியம் நவாசுடன் 2018ல் கைது செய்யப்பட்டார். பின்னர் மற்றொரு ஊழல் வழக்கில் சிக்கிய நவாஸ் ஷெரீப் மறு ஆண்டே நாடு கடத்தப்பட்டார்.

நவாசுக்குப் பின் வந்த பிரதமர் ஷாஹித் ககான் அப்பாஸி, முந்தைய ஆட்சிக் காலத்தில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சராக இருந்தபோது ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதேபோல் தற்போது பிரதமராக இருக்கும் ஷெஹ்பாஸ் ஷெரீப், கடந்த 2020ம் ஆண்டு பணமோசடி வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments