ஒரு பக்கம் பல்வீர் சிங்கை அம்பலப்படுத்திய வழக்கறிஞர் கைது! மறுபக்கம் ஊருக்குள் சமாதானம்!!
பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து, ஏ.எஸ்.பி பல்வீர் சிங் மீது 4 வழக்குகள் பதிய காரணமாக இருந்த வழக்கறிஞர் மகாராஜன், பதற்றத்தை உருவாக்கியதாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மேலப்பாவூர் கிராமத்தில் சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி காவல் நிலையங்களில் விசாரணைக்கு சென்றவர்களின் பற்கள் பிடிங்கி சித்ரவதை செய்யப்பட்ட நிகழ்வை முதல் முறையாக புகாராக வெளி உலகத்துக்கு கொண்டு வந்தவர் வழக்கறிஞர் மகாராஜன். இவர் நேதாஜி சுபாஷ் சேனை என்ற அமைப்பையும் நடத்தி வருகின்றார்
அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய மகாராஜனுக்கு அவரது ஆதரவாளர்கள் கிரேன் மூலம் பிரமாண்ட ரோஜாப்பூ மாலை அணிவித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந்த நிலையில் தென்காசி மாவட்டம் மேலப்பாவூரில் இரண்டு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த பகுதிக்கு செல்ல காவல்துறையினர் விதித்த தடையை மீறி மோட்டார் சைக்கிளில் சென்றதாக குறும்பலாபேரியில் வைத்து வழக்கறிஞர் மகாராஜன் கைது செய்யப்பட்டார்.
அவரது ஆதரவாளர்களான சந்தனகுமார்,கணேசன்,நம்பிராஜன்,பிச்சமணி ஆகியோரையும் கைது செய்தனர் போலீசார். அவர்கள் மீது ஏற்கனவே பதற்றமாக இருக்கும் பகுதியில் குறிப்பிட்ட சமுதாய மக்களை சந்தித்து மேலும் பதற்றத்தை உருவாக்கும் விதமாக 5 பேருக்கு மேல் கூடி பேசியது என்பது உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்க்கிடையே மேலப்பாவூர் கிராமத்தை சேர்ந்த இரு தரப்பு மக்களிடம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக கூறி சமாதானத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
Comments