என்னய்யா சொல்றீங்க.. தமிழில் 100க்கு 138 மார்க்கா..? யார் சார் அந்த அறிவாளி..? 600க்கு 514 ஆனால் 4 பாடங்கள் பெயிலாம்

0 9300

மதுரை திருப்பரங்குன்றம் அருகே 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி ஒருவருக்கு தமிழ் பாடத்தில் 100க்கு 138 மதிப்பெண் போட்ட கூத்து அரங்கேறி உள்ளது. மொத்தம் 600க்கு 514 மதிப்பெண் எடுத்துள்ள மாணவி 4 பாடங்களில் தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் அருகே சூரக்குளம் கிராமத்தை சேர்ந்த வேல்முருகனின் மனைவி ஆர்த்தி என்பவரின் மதிப்பெண் பட்டியலில் தான் இந்த வினோத எண் விளையாட்டு அரங்கேறி உள்ளது

கடந்த 2021 ஆம் ஆண்டு 17 வயதில் பதினொன்றாம் வகுப்பை திருநகர் சீதாலட்சுமி பள்ளியில் முடித்த ஆர்த்தி குடும்ப சூழ்நிலை காரணமாக தொடர்ந்து படிக்க இயலாமல் வேல்முருகனுக்கு திருமணம் செய்து வைத்தனர். குழந்தை திருமணம் செய்து கொண்டதாக வேல்முருகன் மீது வழக்கு பதியப்பட்டு தற்போது வரை வழக்கு நிலுவையில் இருந்து வருகின்றது.

இந்த நிலையில் வேல்முருகன் மனைவி ஆர்த்தி கடந்த 2023 மார்ச் 13ஆம் தேதி திருமங்கலம் சென் பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளியில் தனித்தேர்வராக 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதினார். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ஆர்த்தியும் தனது கணவர் வேல்முருகனுடன் சேர்ந்து ஆன்லைனில் வெளியான தேர்வு முடிவை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதில்

தமிழில் 100 க்கு 138 மதிப்பெண்களும்.,

ஆங்கிலத்தில் 100க்கு 92 மதிப்பெண்களும்.,

கணிதத்தில் 100க்கு 56 மதிப்பெண்களும்.,

இயற்பியல் துறையில் 100க்கு 75 மதிப்பெண்களும்

வேதியல் துறையில் 100க்கு 71 மதிப்பெண்களும்

உயர்கணிதத்தில் 100க்கு 82 மதிப்பெண்களும் பெற்றதாக முடிவுகள் வெளியாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஆர்த்தி தனது ஆன்லைன் பொதுத்தேர்வு முடிவுகளை திருப்பரங்குன்றம் தேவஸ்தான பள்ளிக்கு எடுத்துச் சென்று காண்பித்த போது உரிய விளக்கம் அளிக்காமல் தவிர்ததாகவும்., தமிழில் 90 மதிப்பெண்கள் தான் எழுத முடியும் ஆனால்., இவர்கள் 138 மதிப்பெண்கள் அளித்தது எப்படி ? என்று கேட்ட நிலையில் பதில் இல்லை என்று கூறப்படுகின்றது.

தேர்வில் தோற்றாலும் வெற்றி பெற்றாலும் தன்னுடைய உண்மையான மதிப்பெண்களை தெரிந்தால் மட்டுமே உயர் கல்வியில் பயில முடியும் அல்லது மீண்டும் பொது தேர்வு எழுத முடியும் என்றும், இப்படி குழப்பத்தில் ஆழ்த்துவது போன்ற முடிவுகள் வெளியாகி இருப்பது தங்களுக்கு வேதனை அளித்துள்ளதாகவும் மாணவி ஆர்த்தி தெரிவித்துள்ளார்

அதே போல் 600 க்கு 514 மதிப்பெண் எடுத்துள்ள நிலையில் பதிப்பெண் பட்டியலில் நான்கு பாடத்தில் தோல்வி என்றும் வந்துள்ளதால் மிகவும் வேதனையில் இருப்பதாக தெரிவித்தார்

ஆன்லைன் மதிப்பெண் பட்டியல் தயாரிப்பில் தவறு நிகழ்ந்து இருப்பதாகவும் , அதனை விரைவில் சரிசெய்துவிடுவோம் என்றும் திருப்பரங்குன்றம் கல்வி அலுவலர் தெரிவித்த நிலையில் சம்பந்தப்பட்ட மாணவியை அழைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேசிவருவதாகவும் கூறப்படுகின்றது. முக்கியத்துவம் வாய்ந்த தேர்வில் இவ்வளவு மெத்தனமாக மதிப்பெண்களை பதிவிட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments