600க்கு 600 அசத்திய மாணவி... குரூப் தெரியாமல் பொங்கிய முகநூல் போராளிகளுக்கு பல்பு..! இதிலயுமா நீட் அரசியல் ? விளங்கும்டா
தமிழக பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதன் முறையாக 12 ஆம் வகுப்பு தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் எடுத்து திண்டுக்கல் மாணவி சாதனை படைத்துள்ள நிலையில், அவர் படித்தது வணிகவியல் குரூப் என்பது தெரியாமல் இந்த மாணவிக்காவது மருத்துவ படிப்பில் இடம் கிடைக்குமா என்று கேட்டு முக நூலில் நீட் அரசியல் செய்ய நினைத்தவர்களை நெட்டிசன்கள் கமெண்டுகளால் கலாய்த்து வருகின்றனர்.
பிளஸ் 2 தேர்வில் திண்டுக்கல் அண்ணாமலையார் மில்ஸ் பள்ளி மாணவி நந்தினி 600க்கு 600 மதிப்பெண் எடுத்து அசாத்திய சாதனை படைத்துள்ளார். அவருக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி இனிப்பு ஊட்டி பாரட்டினார்.
வணிகவியல் பாடக்குழுவில் படித்த மாணவி நந்தினி, தமிழ், ஆங்கிலம் , பொருளியல் , வணிகவியல் , கணக்குபதிவியல் , கணினி பயன்பாட்டியல் என 6 பாடங்களிலும் முழுமதிப்பெண்களை பெற்று மொத்தமாக 600 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். வருங்காலத்தில் ஆடிட்டர் ஆவதே தனது லட்சியம் என மாணவி நந்தினி தெரிவித்துள்ளார்.
இந்த விவரம் தெரியாத சில முகநூல் போராளிகள், 600க்கும் 600 மதிப்பெண் எடுத்துள்ள இந்த மாணவிக்காவது மருத்துவம் படிக்க இடம் கிடைக்குமா ?அல்லது நீட் தேர்வை காரணம் காட்டி மருத்துவ கனவு பாழாக்கப்படுமா ? என்று பதிவிட்டு வழக்கம் போல நீட் அரசியல் செய்தனர்.
மருத்துவ படிப்பில் சேர வேண்டுமானால் முதல் அல்லது 2 வது குரூப் என்று அழைக்கப்படும் கணிதம் மற்றும் அறிவியல் பாடக்குழுவில் சேர்ந்து படித்து இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய 3 பாடங்களில் அரசு குறிப்பிட்டுள்ள கட் ஆப் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
இந்த அடிப்படை உண்மையை கூட உணராமல் சமூக வலைதளங்களில் இந்த மாணவி பெற்ற மதிப்பெண்களை மட்டும் பார்த்து பொங்கிய நீட் போராளிகளின் தலையில் எதிர் கமெண்டுகளால் நச் என்று குட்டி உள்ளனர் விவரம் அறிந்த நெட்டிசன்கள்.
அதில் தம்பி, அந்த பொண்ணு மருத்துவம் படிக்கனுமுன்னா , கணிதம் அல்லது அறிவியல் பாடக் குழுவில் சேர்ந்து படித்திருகனும்டா... என்றும் படிக்கிற காலத்தில் ஒங்கா படிச்சிருந்தா உனக்கு இந்த அவமானம் வந்திருக்காதுடா என்றும் கலாய்த்து வருகின்றனர். இதனால் பல்பு வாங்கிய சிலர் தங்களின் நீட் அரசியல் பதிவை நீக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
அதே போல செங்கல்பட்டு பகுதியில் உள்ள பிளசிங்ஸ் மெட்ரிக் பள்ளியில் வணிகவியல் குழுவில் பிளஸ் 2 படித்த மாணவி லட்சுமி பிரியா என்ற மாணவி 596 மதிப்பெண் எடுத்த நிலையில் அந்த பள்ளியின் முதல்வர் சோபியாரேச்சல் வெளியிட்டுள்ள வீடியோவில், மாணவி லட்சுமி பிரியா எப்பயுமே புத்தகத்தை வச்சிகிட்டு படிச்சிகிட்டு இருக்கிற டைப் இல்ல என்றும் அவ நல்லா டி.வி நிகழ்ச்சி எல்லாம் பார்ப்பா என்றும் தெரிவித்துள்ளார்.
Comments