இரும்புல்லாம் துரும்பு.. கேட்டை உடைத்து தேர்வு அறைக்குள் நுழைந்தனர்..! டி.என்.பி. எஸ். சி தேர்வு பரிதாபங்கள்

0 2358
இரும்புல்லாம் துரும்பு.. கேட்டை உடைத்து தேர்வு அறைக்குள் நுழைந்தனர்..! டி.என்.பி. எஸ். சி தேர்வு பரிதாபங்கள்

காஞ்சிபுரத்தில் சாலை ஆய்வாளர் பணிக்கான தேர்வுக்கு 5  நிமிடம் தாமதமாக வந்தவர்களை,  கல்லூரி வாசல் கேட்டை பூட்டி வெளியே நிறுத்தப்பட்டதால் ஆத்திரம் அடைந்த தேர்வர்கள் இரும்பு கேட்டை உடைத்துக் கொண்டு தேர்வு அறைக்குள் புகுந்து தேர்வு எழுதிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

ஒரு வினாடி தாமதித்தாலும் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள் என்ற பதற்றத்துடன் ஓடிவரும் மாணவன்... உள்ளே பலத்த சோதனைக்களுக்கு பின்னர் ஒருவர் பின் ஒருவராக அனுமதிக்கப்படும் மாணவ மாணவியர்... எவரும் அத்துமீறி நுழைந்து விடாதபடி பலத்த பாதுகாப்பு...

இவை எல்லாம் நீட் தேர்வு மையங்களில் கண்ட காட்சிகள்..! இதே நேரத்தில் 5 நிமிடம் தாமதமாக வந்து விட்டு உள்ளே அனுமதிக்க கோரி சாலை மறியல் செய்து.. கத்தி கூச்சலிட்டு... இறுதியாக பூட்டப்பட்ட இரும்புக்கேட்டை உடைத்து உள்ளே புகுந்து 50 பேர் தேர்வு எழுதிய கூத்து தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சாலை பணி ஆய்வாளர் தேர்வில் அரங்கேறி உள்ளது.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் உள்ள சாலை ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில், காலை மற்றும் மாலை ஆகிய இருவேளைகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்வர்களுக்கு அதற்கு உண்டான நுழைவுச்சீட்டு அனுப்பப்பட்டது.

காலையில் தேர்வு முடிந்த பின் மதியம் 2 மணிக்கு துவங்க வேண்டிய தேர்வுக்கு தேர்வர்கள் 30 நிமிடம் முன்னதாக தேர்வு மையத்திற்குள் நுழைய வேண்டும் என விதிகள் உள்ள நிலையில் மதியம் 1.30 மணி அளவில் தேர்வு மைய இரும்பு கேட் கதவுகள் இழுத்துப் பூட்டப்பட்டது. தாமதமாக வந்த 50க்கும் மேற்பட்ட தேர்வர்கள் உள்ளே விட கோரி வாசலில் நின்ற காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரி கதவுகள் திறக்கப்படாததால் , வாசல் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். அவர்களை எவரும் கண்டுகொள்ளாத நிலையில் இரும்பு கேட் மீது ஏறி உள்ளே இருந்த அதிகாரிகளிடம் கதவை திறக்க கோரிக்கை வைத்தனர். அவர்கள் கண்கொள்ளாமல் நின்றனர்

போராட்டம் செய்தவர்கள் ஒன்று திரண்டு இரும்புக்கேட்டை பிடித்து ஆட்டிய படி வாக்குவாதம் செய்தனர். காலையில் மட்டும் ஐந்து நிமிடம் தாமதமாக வந்த தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர், ஆனால் தற்போது அனுமதிக்காதது ஏன் என்ற கேள்வியை எழுப்பி நுழைவாயிலின் கதவை பிடித்து வேகமாக ஆட்டி இரும்பு கம்பிகளை உடைத்து கல்லூரிக்குள் நுழைந்தனர்.

வேகமாக ஓடிச்சென்றவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டு தேர்வெழுத தொடங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குறைந்த அளவு பாதுகாப்பு மட்டுமே வழங்கப்பட்டிருந்ததால் இந்த சம்பவத்தை தடுக்க இயலாத போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையை முன்னெடுத்தனர்

தேர்வு மையத்திற்கு வந்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு மைய கண்காணிப்பு அலுவலர் இரும்பு கேட் உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். டிஎஸ்பி தலைமையில் குவிக்கப்பட்டுள்ள ஏராளமான போலீசார் இரும்பு கேட்டை உடைத்துச்சென்ற தேர்வர்களை அடையாளம் கண்டனர். 50 க்கும் மேற்பட்டோர் மீது இரு பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீட் தேர்வு போன்று டி.என்.பி.எஸ். சி தேர்வுக்கும் உறுதியான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யப்பட வேண்டும் என்றும் இல்லையேல் தேர்வில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது என்று மற்ற தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments