நெஞ்சில குத்துனது சொந்தமா இருந்தா.. எப்படி கண்டுபிடிக்கறது ? தஞ்சையில் கொலை... திருச்சியில் சடலம்..!

0 3600

உறவுக்கார பெண்களை கேலி கிண்டல் செய்ததோடு, காதல் வலையிலும் வீழ்த்திய வம்புக்கார இளைஞரையும் அவரது கூட்டாளியையும் மது விருந்து தருவதாக அழைத்துச் சென்று தஞ்சாவூரில் கொலை செய்த உறவினர்கள், சடலங்களை காரில் எடுத்துச்சென்று திருச்சியில் வீசிய சம்பவம் அரங்கேறி உள்ளது....

திருச்சி மாவட்டம் முசிறி அருகே பொன்னுச்சங்கம்பட்டி பெரிய பாலத்தின் கீழ் காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. அதே போல துறையூர், கொத்தம்பட்டி பகுதியிலும் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று காயங்களுடன் மீட்கப்பட்டது. இரு சடலங்களையும் மீட்ட போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார், முசிறி டிஎஸ்பி யாஸ்மின் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணையை முடுக்கி விட்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சடலமாக கிடந்தவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த நெடுவங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பிரபு மற்றும் ஸ்டாலின் என்பதும், காதல் விவகாரத்தில் கொலை செய்து இருவரது சடலங்களையும் கொலையாளிகள் காரில் துறையூர் பகுதிக்கு எடுத்து வீசிச் சென்றதும் தெரிய வந்தது. இந்த கொலை தொடர்பாக பிரபுவிடம் கடைசியாக செல்போனில் பேசிய ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த உறவினர்களான ஹரி, சூர்யா ஆகிய இரு இளைஞர்களையும் பிடித்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது.

கார் ஓட்டுநராக வேலைபார்த்து வந்த பிரபு, ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்து பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் உறவுக்கார பெண்களை கேலி கிண்டல் செய்வதை வழக்கமாக்கி உள்ளார். அதில் ஒரு பெண்ணை தனது காதல் வலையில் வீழ்த்தி உள்ளார். இதனை அறிந்த பெண்ணின் உறவினர்கள் பிரபுவை அழைத்து எச்சரித்துள்ளனர்.

பிரபு காதலை கைவிட மறுத்துள்ளார். அடங்க மறுக்கும் பிரபுவை தீர்த்துக்கட்ட திட்டமிட்ட உறவினர்களான ஹரி மற்றும் சூர்யா ஆகியோர் பிரபுவை மது விருந்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஓசி குடி என்பதால் பிரபுவின் கூட்டாளியான ஸ்டாலின் என்பவரும் அழைக்காமலேயே உடன் சென்றுள்ளார். அவரை விரட்டி விட பலமுறை முயன்றும் தனக்கும் சரக்கு வேண்டும் என்று ஸ்டாலின் விரும்பிச் சென்று வில்லங்கத்தில் சிக்கியதாக கூறப்படுகின்றது.

போதை தலைக்கேறிய நிலையில் தள்ளாடிய பிரபுவை வெட்டிக் கொலை செய்ததோடு, தங்களை காட்டிக் கொடுத்து விடக்கூடாது என்பதற்காக உடன் வந்த ஸ்டாலின் கதையையும் முடித்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும் கொலை செய்யப்பட்ட இருவரது சடலங்களையும் கூட்டாளி அப்துல்லா என்பவரது காரில் ஏற்றி மற்றொரு கூட்டாளி உதவியுடன் திருச்சி பகுதியில் வீசிச்சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து ஹரி, சூர்யா ஆகிய இருவரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள அப்துல்லா உள்ளிட்ட இருவரை தேடி வருகின்றனர். சுந்தரபாண்டியன் சினிமா நாயகன் போல ஊருக்குள் உறவு பெண்களிடம் கிண்டலடித்து சுற்றி வந்த இளைஞரை உறவுக்கார இளைஞரே தீர்த்துக்கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments